பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குடும்ப விளக்கு!

ஈரோடு கான்சாகிப் சேக்தாவுத் அவர்களின் சென்ட்ரல் நாடக அரங்கில் 1-6-43இல் நாடகம் தொடங்கியது. மதுரை சிவலீலா வெற்றிக்குப்பின் நாங்கள் சென்ற நகரங்களிலெல்லாம் சிவலிலாவையே முதல் நாடகமாக ஆரம்பித்தோம். ஈரோட்டில் தொடர்ந்து ஐம்பது நாட்கள் சிவலீலா நடைபெற்றது. இப்போ தெல்லாம் சென்னையில் புதிய நாடகங்கள் நடந்தால், அது 25 முறை நடைபெற்று வெள்ளி விழாக் காணுவதே வியப்பாக இருக்கிறது. அப்படி வெள்ளி விழாக்காணும் நாடகம் கூடத் தொடர்ந்து ஒரே அரங்கில் நடைபெறுவதில்லை. நாடகம் தொடங்கிப் பல மாதங்களுக்குப் பிறகுதான், வெள்ளிவிழா, பொன்விழா எல்லாம் நடை பெறுகின்றது. 1940 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பும்கூட, இது போன்ற விழாக்கள் எல்லாம் தொழில்முறை நாடக சபைகளுக்குச் சாதாரண நிகழ்ச்சிகளாக இருந்தன.

ஈரோட்டில் சிவலிலாவுக்குப் பின் கிருஷ்ணலீலா, மகா பாரதம், ராஜாபர்த்ருஹரி, கந்தவீலா, ஒளவையார், மேனகா ஆகிய நாடகங்கள் ஒவ்வொன்றும் மாதக்கணக்கில் நடந்தன. திரைப்படமாக வந்து ஓடிக்கொண்டிருந்த ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகம் கூட ஈரோட்டில் 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. வசூலும் நல்ல முறையில் இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒவ்வொரு நாடகத்தையும் பலமுறை பார்த்து மகிழ்ந்தார். பார்த்த மறுநாள் அதைப்பற்றித் திறனாய்வு செய்யவும் தவறுவதில்லை,

பட்டக்காரர் பங்களா

இந்தமுறை எங்கள் குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கம்பெனிக்கு மட்டும் நகருக்குள் ஒரு பெரிய வீடு கிடைத்தது. அங்கேயே குடும்பத்தினரும் தற்காலிகமாகத் தங்கி