பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426


கொண்டார்கள். சாமியாரே இதை என்னிடம் கூறினார். “பட்டக்காரரின் இளைய பையனை நான் தான் கெடுத்து விட்டேன் என்று. எல்லோரும் முணுமுணுக்கிறார்கள். என்மீது வீண்பழி” என்றார். சாமியார் கூறியது முற்றிலும் உண்மையென்பது எனக்குத் தெரியும். அர்ச்சுனன் அவர்கள் துடிப்பான இளைஞர். அவர் இளமைப் பருவத்திலேயே காலமானது தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். கைவல்ய சாமியாரின் மீது இளையவரைக் கெடுத்து விட்டதாகக் குறை சொல்லப் பட்டாலும், அவருக்குரிய மரியாதையினைச் செலுத்த யாரும் தவற வில்லை. சாமியாரோடு பேசிக்கொண்டிருப்பதில் எனக்குத் தனி இன்பம். அவ்வளவு சுவையாகப் பேசுவார் அவர். பட்டக் காரரின் மூத்த மகன் நல்லசேனதிபதி சர்க்கரை மன்றாடியார் நல்ல கலையுணர்வுடையவர். சிறந்த நாடக ரசிகர். அவர் ஒருநாள் சிவ லீலா நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். எனக்கு ஒரு தங்கச் சங்கிலி பரிசளித்துப் பாராட்டினார்.

அவசரத் தந்தி

நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது. ஒருநாள் சேலத்திலிருந்து அவசரத் தந்தி கிடைத்தது. அதில் என் மனைவி மீனாட்சியின் நிலை அபாயம் என்று கண்டிருந்தது. உடனே காரில் சேலம் சென்றேன். மனைவியைப் பார்த்தேன், என்னைக் கண்டவுடன் அழுதாள். என் கண்களும் கலங்கின. அழகே வடிவாக இருந்த அவள் மெலிந்து நலிந்துபோன நிலையில் படுக்கையில் கிடந்தாள். மைத்துனார் சுப்பிரமணியம் தங்கைக்கு காசநோய் என்றும் பெருந்துறை சானிட்டோரியம் கொண்டுபோய் உடனடியாகச் சிகிச்சை செய்யும்படி டாக்டர் கூறியதாகவும் உருக்கத்தோடு சொன்னார். நான் டாக்டரைச் சந்தித்தேன். மனைவியின் உடல் நிலைப்பற்றி விபரமாக அறிந்தேன். உடனே ஈரோட்டிலுள்ள பெரியண்ணாவுக்குத் தந்திமூலம் தகவல் கொடுத்தேன். உடனடியாகப் பெருந்துறை சானிட்டோரியத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மறுநாளே மனைவியைப் பெருந்துறைக்குக் கொண்டுபோய் சானிட்டோரியத்தில் சேர்த்தேன். தனியறையில் வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். மருத்துவமனை மேலதிகாரி விசுவநாதனும், டாக்டர் முத்துசாமியும் மிகுந்த