பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


எங்கள் தந்தை அப்போது ஸ்பெஷல் நாடகம் என்ற மரக் கட்டையைப் பற்றிக் கொண்டு வாழ்க்கைக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். கொழும்பு, யாழ்ப்பாணம் முதலிய இலங்கைத் தீவின் நகரங்களிலேதான் அவரது நாடகப்பணி மிகுதியாக நடை பெற்று வந்தது. மதுரை அம்மன் சந்நிதியை அடுத்த சோற்றுக் கடைத்தெருவில் நாங்கள் குடியிருந்தோம். பண்டை நாளில் இத் தெருவில் உணவு விடுதி இருந்திருக்குமென நினைக்கிறேன். ஆனால், நாங்கள் இருந்தபோது சோற்றுக்கடையோ, இந்தக் காலச் சாப்பாட்டு ஒட்டலோ எதுவுமில்லை. அருகே தெற்கு ரத வீதியிலுள்ள வெள்ளியம்பலம் கலாசாலேதான் நான் படித்த பள்ளிக்கூடம். என் மூத்த அண்ணா திரு டி. கே. சங்கரன் ஆறாவது வகுப்பிலும், சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி நான்காவது வகுப்பிலும், நான் இரண்டாவது வகுப்பிலுமாகப் படித்துக் கொண்டிருந்தோம். தம்பி பகவதி அப்போது கைக்குழந்தை.

கம்பெனியில் சேர்ந்தோம்

என் தந்தையார் நன்கு சிந்தித்தார். எங்களோடு கலந்து பேசினார். என்னையும், சின்னண்ணாவையும் சேர்த்துவிட எண்ணி னார். பெரியண்ணா மட்டும் படிப்பது நலமெனத் தோன்றியது. ஆனால், பெரியண்ணாவோ அப்பாவின் முடிவைக் கேட்டுக் கலங்கினார். எங்களைப் பிரிய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே, பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நாங்கள் நாடகக் கம்பெனியில் சேர்ந்தோம். தந்தையார் சிறந்த பாடகர். நல்ல சாரீர வன்மையுடையவர். எனவே, அக்காலத்தில் மிக அவசியமாகக் கருதப்பட்ட பின்பாட்டுப் பாடும் ஸ்தானத்தில் அவரையும் கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள். எங்களைத் தனியே விட்டுப் போகத் தந்தையார் இசையவில்லை.

பெரிய அண்ணாவுக்குப் பத்து ரூபாய் மாதச் சம்பளம். சின்னண்ணாவுக்கு எட்டு ரூபாயும் எனக்குப் பதினேந்து ரூபாயும் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. பின்பாட்டுப் பாடும் என் தந்தையாருக்கு மட்டும் அறுபத்தி ஐந்து ரூபாய் சம்பளம். 1918-ஆம்ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் நாடகங்கள் மதுரையில் ஆரம்பமாயின.