பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446


இதற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும். தமிழ் நாடகக் கலையானது அழிந்து போகும் என்று ஒரு நாடகாபிமானியும் பயப்பட வேண்டியதில்லை. கிராமபோன் ரிக்கார்டுகள் வந்த பிறகும் அவற்றைப் பாடிய சங்கீத வித்துவான்களை நேரில் கேட்க நாம் அதிகமாக விரும்புவதில்லையா? பேசும் படத்தில் நடித்த நடிகர்களை நாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதில்லையா? இந்த உணர்வு இருக்கும் வரை நாடகம் ஒரு நாளும் அழியாது என்று நான் உறுதியாக கூறுவேன்.”

பம்மல் முதலியார் அவர்கள் இவ்வாறு பேசி முடித்ததும் எம். கே. தியாகராஜ பாகவதர் மாநாட்டைத் திறந்து வைத்தார். அவர் சூத்திரக் கயிற்றை இழுத்ததும் மகேந்திர ஜாலம்போல் மேடையை மறைத்துக் கொண்டிருந்த பூச்சரங்கள் அப்படியே இருபுறமும் உயர்ந்து விலகி மேடையை அலங்கரித்துக் கொண்டு நின்றது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த ரசிகப் பெருமக்கள் பெருத்த கைதட்டலுடன் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். மேடையின் நடுவே அமர்ந்திருந்த தலைவர் ஆர்.கே. சண்முகம் “இதுவும் ஒரு நாடகம்போலிருக்கிறதே!” என்றார். திறப்புரை நிகழ்த்திய திரு. தியாகராஜ பாகவதர் தமது பேச்சில் முக்கியமாகக் குறிப்பிட்ட கருத்து இது.

“பெரியோர்களே, தாய்மார்களே!”

நம் தமிழ் நாடகத்தில் எடுத்ததற்கெல்லாம் பாட்டாகவே பாடி விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது ஒரளவு குறைய வேண்டியதுதான். என்றாலும், ஒரேயடியாய்ப் பாட்டுக்களைக் குறைத்து விட்டால் பொதுமக்களின் ஆதரவு கிடைக்குமென்று நான் நம்பவில்லை. ஏனென்றால் நாடக மேடை யில் பாட்டு அதிகமாக ஏற்பட்டது இன்று நேற்றல்ல. முற் காலத்தில் நம் நாடகம் முழுவதுமே பாட்டாகதான் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. வரவர அது குறைந்து தான் வந்து கொண்டிருக்கிறது. ஒரேயடியாகப் பாட்டைத் தள்ளிவிடக் கூடாது. இயலையும், இசையையும் தன்னுள் கொண்டதாகவே இருக்க வேண்டும் நாடகம். கதைக்குத் தகுந்த முறையில் பாடல்கள் அமைக்க வேண்டும் “.