பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

547


இன்று நடைபெறும் நாடகங்கள் பெரும்பாலும் நாட்டின் நிலையைச் சித்தரிப்பவையாகவும் சமூக முன்னேற்றத்திற்கு வழி காட்டுபவையாகவும் இருக்கின்றன. வெறும் பொழுது போக்கா யில்லை. புத்திக்கும் வேலை கொடுப்பவைகளாயிருக்கின்றன. ஆகவே, பத்திரிக்கைகள் இவற்றை போற்றி வளர்க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் பார்த்தாலும் நமது தமிழ்நாட்டில் தான் நாடகங்கள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன வென்று உங்கள்முன்னிலையில் நான் ஆணித்தரமாகக் கூறுகிறேன்: தற்புகழ்ச்சியல்ல, உண்மை. இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். எல்லாவகையிலும் தன்னைப் பற்றிக் குறைவாக மதிப் பிடுவதும், பிறரை, பிறர் பொருளை, பிறர் செயலை, பிறர் இலக்கியத்தைப் புகழ்வதுமே தமிழனின் நீண்டகாலப் பண்பாகி விட்டதென்று நமது ம.பொ.சி. அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அது உண்மை...

நான் ஒரு ரஸிகன்: இலக்கியங்களை நன்றாக ரவிக்கத் தெரியும் எனக்கு. எனது ரஸிப்புத் தன்மையில் பூரண நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று கூற விரும்புகிறேன்.

ஹிந்தி, குஜராத்தி, முதலிய பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்த்த பல கதைகளை நான்படித்திருக்கிறேன். உண்மையாகச் சொல்லுகிறேன். குப்பை கூளங்கள் கூட மொழி பெயர்க்கப் படுகின்றன. பிறநாட்டு நல்லறினார்கள் சாத்திரங்களைத்தானே நமதுமகாகவி பாரதியார் மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கிறார். ........இதுபற்றி எனது நண்பர்களான சில எழுத்தாளர்களைக் கேட்டேன். என்னசார் செய்வது? மொழிபெயர்ப்பு நாடகங்கள் தான் சீக்கரம் விற்பனையாகின்றனவென்று பிரசுரகர்த்தர்கள் கூறுகிறார்கள் என்றார். தமிழ் மக்களின் தாழ்வு மனப்பான்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்?

இன்று தமிழுலகில் வெளி வந்துள்ள சிறு கதைகளையும், கவிதைகளையும் பிற மொழிகளில் பெயர்த்தால் தெரியும் தமிழனின் இலக்கியத் திறமை. அறிவிலும் கற்பனையிலும் தமிழன் யாருக்கும் இளைத்தவனல்ல என்ற உண்மையை அப்போதுதான் உலகம் தெரிந்து கொள்ளும். நம்மை நாம் குறையாக எண்ணா கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டதான் இதைக் கூறினேன்:-