பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 101

விளிம்பினி லிருந்தே இன்ப
      வெண்ணுரை தொடர்ந்து வீழும்
முளிபனிக் கட்டி யாமோ?
      முதிர்தொங்கல் ஒளிக்கற் றையோ?
களிபெரும் இன்ப ஆட்சிக்
      கதவுகள் திறந்தன வோ?எப்
பளிங்கு மண்டப மிடிந்தே
      பாறையாய்த் தொடர்ந்து வீழும்! (18)

மந்தையாய் மனிதர் உன்னை
      வந்துவந் தேதான் பார்ப்பார்
சிந்தையை உனக்குத் தந்தார்
      சிலரேஆம்! மற்றோ ரெல்லாம்
விந்தைஈ தென்பார் சென்றே
      வேசிகள் போலக் காசுப்
பந்தத்தில் கட்டுண் டேஉன்
      பாசத்தை மறப்பா ரன்றோ? (19)

கனடாநல் நாடும் மேன்மைக்
      கவினாரும் அமெரிக் காவும்
தனதாகக் கொண்ட ஒப்பில்
      தடையிலா நயாக ராவே!
உனதரும் அழகு கோடி!
      உரிமைகள் கோடி! கோடி!
எனதரும் இதயம் ஆடி
      இருப்பாய்நீ காலம் பாடி! (20)

குதிரையின் லாடம் போலக்
      குறியீடே அமைந்த இந்தப்
புதினத்தைப் பழமைக் காலப்
      புத்தெழில் பெட்ட கத்தை
மதியினால் வெல்லும் ஆற்றல்
      மமதையர் தம்மைக் கூட
விதியென மலைக்க வைக்கும்

      மேன்மையின் மேன்மை காண்போம்! (21)