பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 ♦ என் அமெரிக்கப் பயணம்

(7) காண்டாமிருகம்[1]: இங்கு இரண்டு காண்டாமிருகங்கள் உறங்கிய நிலையில் காணப் பெற்றன. ஒன்றன் முதுகுப் புறத்தையும், மற்றொன்றின் முகப் பக்கத்தையும் பார்க்க முடிந்தது.

(8) ஒட்டகங்கள் வாழும் சூழ்நிலையில் ஒரே ஒர் ஒட்டகந்தான் எங்கள் கண்ணில் பட்டது. அதுவும் வேறு பக்கத்தில் திரும்பிய நிலையில் இருந்தது.

(9) சிறுத்தைப் புலிகள்[2]: அவை வாழும் இயற்கைச் சூழ்நிலையில் மூன்றைக் கண்டோம்.புள்ளிகள் நிறைந்த உடலைக் கொண்டஇவை மூன்றும் கம்பீரமாக அலைந்து திரிவதைக் காண முடிந்தது. இக் காட்சி எங்கட்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. (படம் - 41)

பறவைகள் ஊர்வன பகுதி: இப்பகுதிக்கு வருகின்றோம். இங்கு வாழும் சூழ்நிலையிலுள்ள பல்வேறு வகை வாத்துகள், பல்வேறு கொக்கு வகைகள் இவை கண்ணுக்கு விருந்தாக அமைந்தன. கரண்டி வடிவில் அமைந்த மூக்குகளைக்[3] கொண்ட கொக்கு வகைகளும் ஆரஞ்சு நிறமுள்ள கொக்கு வகைகளும் எங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன. ஆரஞ்சு வகைக் கொக்குகள் ஒற்றைக் காலில் நின்று கொண்டும், மற்றொரு காலை உடலோடு கற்றி வைத்துக் கொண்டும் உறங்கும் நிலை எங்களை வியப்பில் ஆழ்த்தியது[4]. வேறு சில பறவைகளும் எங்கள் கண்ணுக்கு விருந்தாக அமைந்து வியப்புக்கடலில் ஆழ்த்தி மகிழ்ச்சிப் பெருக்கை விளைவித்தன.

அடுத்து ஊர்வனவற்றைப் பார்க்கின்றோம். பச்சைப் பாம்புகள், மஞ்சள் நிறப் பாம்புகள், ஊர்ந்த நிலையில் வாழும் சூழ்நிலையில் பல்வேறு வகைச் சிறு சிறு பாம்புகள், சிறு சிறு மலைப் பாம்புகள், கட்டு விரியன்கள், படம் எடுத்தாடும் நல்ல பாம்புகள் எங்கள் உள்ளத்தைக் கவர்ந்து மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தின. ஒரிடத்தில் பெரிய மலைப் பாம்பு ஒன்றைக் கண்டோம். அது சுருண்ட நிலையில் உறங்கிக் கொண்டிருந்தது. நஞ்சு விளைவிக்கக்கூடிய பச்சை, நீல நிறமுள்ள பல்வேறு தவளைகள் எங்கள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தன. கண்ட வேறு சில காட்சிகள் விரிவஞ்சி விடப் பெற்றன. (படம் - 42, 43)

மோனோ இருப்பூர்தி செஃபாரி[5]: இப்படி ஒர் இருப்பூர்தி ஆஃபிரிக்காவின் பிராணிகளைச் சுட்டிக்காட்டும் நிலையில் அப் பகுதியைச் சுற்றி ஒடிக் கொண்டிருந்தது. ஒருவருக்குக் கட்டணம் 2 டாலர்; இங்கு முதியோர்களுக்குச் சலுகை இல்லை. இந்த ஊர்தியில் சக்கர வண்டிகளுடன்

  1. 6. Rhinoceros
  2. 7. Cheetahs
  3. 8. Spoon Bill
  4. 9.வில்லிபாரதத்தில் படித்த அர்ச்சுனனின் தவ நிலை நினைவிற்கு வந்தது.
  5. 10. Mono Rail Safari