பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ♦ என் அமெரிக்கப் பயணம்

நம்பியாண்டார் நம்பி அவற்றையெடுத்து சோதித்து ஒவ்வொருவர் வாக்குகளாக வந்தவற்றைப் பிரித்து வகைப்படுத்தினார். அவர்கள் முக்தியடைந்த காலத்தை முன்வைத்து அதன்படி முறை அமைத்தார். அவற்றிலும் சில வரையறைகளுடன் பிரித்து வைத்தார். பதினாறு வயதில் நடைபெற்ற திருமணத்தன்றே முக்தியடைந்த ஞானசம்பந்தப் பெருமானது பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும்; அடுத்து 81 அகவையில் சிவப்பேறு அடைந்த நாவுக்கரசரின் பதிகங்களை சிலவரையறைப்படி பாகுபாடு செய்து, நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாகவும், இந்த இரு பெருமக்கள் முக்தி அடைந்த பிறகு பல ஆண்டுகட்குப் பிறகு பிறந்த கந்தரமூர்த்தியின் திருப்பாடல்களை ஏழாம் திருமுறையாகவும் அமைத்து அடைவுபடுத்தினார்.

சிறிதுகாலம் கழித்து பிற்காலத்தார் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எட்டாம் திருமுறையாகவும்: ஒன்பதின்மர் அருளிய ஒன்பது பிரபந்தங்களை ஒன்பதாம் திருமுறையாகவும்; திருமூலர் திருவாய் மலர்ந்த திருமந்திரம் மூவாயிரத்தைப் பத்தாம் திருமுறையாகவும்; 11 பேர் அருளிய 27 பிரபந்தங்களை பதினோராந் திருமுறையாகவும் அமைத்தனர். இதில் நம்பிகளின் பிரபந்தங்களும் இடம் பெற்றுள்ளன. சில காலம் கழிந்த பின்னர் சேக்கிழார் அடிகள் பாடிய முதற்புராணமாகிய பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்ந்து விடுகின்றது. இத்துடன் இலக்கியத் தொகுப்புகள் நிறைவு பெறுகின்றன.

2. தத்துவங்கள்

இனி இருசமய தத்துவங்களைப்பற்றிய ஒப்பீட்டை நோக்குவோம்.

வைணவ தத்துவம்

சித்து: இதில் எறும்பு, கொசுமுதலாக மனிதன் ஈறாக அனைத்து உயிர்த்தொகுதிகளும் அடங்கும்.

அசித்து: புல்பூண்டு முதல் அனைத்துத் தாவரவர்க்கங்களும் மண், கல் முதல் அண்டங்கள் அனைத்தும் இப்பகுதியுள் அடங்கும்.

ஈசுவரன்: இது கடவுள். சைவர்கள் குறிப்பிடும் ஈசுவரன் (சிவன்) வேறு இங்கு இச்சொல் திருமால் முதலிய தெய்வங்களைக் குறிக்கும்.

சைவ தத்துவம்

பதி: கடவுள். இதில் சொரூப சிவன், தடத்தசிவன் இரண்டும் அடங்கும்.

பசு: உயிர்த் தொகுதிகளைச் சித்தாந்தம் இவ்வாறு பேசும்.