பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

என் சரித்திரம்



அத்தியாயம்—16

கண்ணன் காட்சியின் பலன்

காலை எட்டு நாழிகையளவில் குன்னம் போய்ச் சேர்ந்தோம். சிதம்பரம் பிள்ளையும் அவர் நண்பர்களும் எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அங்கே எங்களுக்காக அமைக்கப் பெற்றிருந்த வீட்டில் இறங்கினோம்.

அந்த ஜாகை அவ்வூரிலிருந்து ஸ்ரீ வைஷ்ணவராகிய ராம ஐயங்கா ரென்பவருடைய வீட்டின் ஒரு பகுதியாகும். அவர் என் தந்தையாருக்கு இளமை முதல் நண்பர்; சித்த வைத்தியத்தில் நல்ல பயிற்சி யுடையவர். அவர் வசிஷ்டபுரத்தா ரென்னும் வகையைச் சேர்ந்தவர். குன்னத்திலும் அதைச்சார்ந்துள்ள ஊர்களிலும் அவ்வகையினர் இருந்தனர். அவர்கள் வைதிகத் தொழில் செய்து வந்தனர். பிறரை ஆதரிக்கும் குணமும் எல்லாரோடும் மனமொத்துப் பழகும் தன்மையும் வாய்ந்தவர்கள்.

என் தந்தையார் அரியிலூரிலிருந்து வந்தமையால் அவரை ‘அரியிலூரையர்’ என்ற பெயரால் குன்னம் முதலிய இடங்களிலுள்ளவர்கள் வழங்கலாயினர். அப்பக்கங்களில் உள்ளவர்கள் அவருடைய கதைகளையும் சங்கீதத்தையும் முன்னமே கேட்டவர்கள். “அரியிலூரையர் இங்கே வந்திருக்கிறார்” என்ற செய்தி எல்லாரிடத்தும் பரவியது. அவரவர்கள் அன்போடு தங்கள் தங்களால் இயன்ற பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து என் தந்தையாரைப் பார்த்துச் சென்றார்கள். அரிசி, பருப்பு, காய், கறி முதலிய உணவுப் பொருள்கள் வீட்டில் நிரம்பி விட்டன. அவற்றைப் பார்த்தபோது என் தந்தையார், அரியிலூர்க் கோயில் வாசலில் நிகழ்ந்த தீபாராதனையையும் கண்ணன் காட்சியையும் நினைந்து நினைந்து இன்புற்றார். ஊர் ஊராய்த் திரிந்து ஜீவிக்க வேண்டி நேர்ந்தால் என் செய்வது!’ என்று அவருக்கிருந்த சிந்தனை மாறியது.

ஊற்றை நாட்டாரும் பிறரும்

குன்னத்திற்கு எங்களை வருவித்த சிதம்பரம் பிள்ளை கார்காத்த வேளாளர். அவ்வூரிலுள்ள மற்ற வேளாளர்களிற் பெரும்பான்மையோர் ஊற்றை நாட்டார். குன்னத்திற்கு அருகில் ஊற்றத்தூரென்ற தேவார வைப்பு ஸ்தலமொன்று இருக்கிறது. அதைத் தலைநகராகக் கொண்ட ஊர்களின் தொகுதி ஊற்றை