பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணன் காட்சியின் பலன்

87

நாடு என்று பழங்காலத்தில் வழங்கி வந்தது. அங்கே வாழ்ந்தமையால் அவ்வேளாளர்களுக்கு ஊற்றை நாட்டாரென்னும் பெயர் வந்தது. ஊற்றத்தூரிலுள்ள சுத்தரத்னேசுவர ரென்னும் கடவுளே அவ்வகுப்பினருக்குக் குல தெய்வம். படையாட்சிகள், உடையார்கள் முதலிய வேறு சாதியினரும் குன்னத்தில் இருந்தனர். யாவரும் தெய்வ பக்தியும் தரும சிந்தையும் உடையவர்கள். காலை மாலைகளிற் கோயில்களிற் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து தேவார திருவாசகங்களைச் சொல்லித் தோத்திரம் பண்ணிவிட்டு வருவார்கள். தங்கள் வருவாயில் ஒரு பகுதியைத் தருமத்திற் செலவிடுவார்கள்.

அவர்களுள் நல்ல நூல்களைக் கற்றவர்கள் பலர்; கல்லாவிடினும் பல நூல்களிலுள்ள விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டோரும் உண்டு. கல்வி, கேள்வி இல்லாதவர்களும் கற்றவர்களிடத்தில் அன்பு வைத்து மரியாதையோடு நடப்பார்கள். செல்வத்தினால் உண்டாகும் அகங்காரம் முதலிய குற்றங்களும் தம்முள் விரோதமும் அவர்கள்பால் இருக்கலாம்; ஆனாலும் கல்வியுடையவர்களைக் கண்டால் அவர்களை ஆதரிப்பதில் எல்லோரும் ஒரு முகப்பட்டு நிற்பார்கள். இந்த நிலை அக்காலத்தில் தமிழ்நாட்டுக் கிராமங்கள் எங்கும் காணப்பட்டதுதான்.

’ஆனந்தமான பரம்’

குன்னத்திற்குச் சென்ற தினம் பிற்பகலில் தந்தையாரும் நானும் சிதம்பரம் பிள்ளையின் வீட்டிற்குச் சென்றோம். அவ்வீட்டுத் திண்ணையிற் பலர் கூடியிருந்தார்கள். சிதம்பரம் பிள்ளையும் அவர் தமையனாராகிய அப்புப் பிள்ளை என்பவரும் அங்கேயிருந்தனர். எல்லோரும் எங்களை வரவேற்றனர். அவர்கள் முகத்தில் விளங்கிய புன்னகையில் எங்கள் மனங்கள் திளைத்துத் தளிர்த்தன. சிதம்பரம் பிள்ளை தந்தையாரை அழைத்துத் தம் வீட்டுக்குள் சென்று இடைகழியிலுள்ள தம் புஸ்தக அலமாரியைக் காட்டினார். அதிலே பல புஸ்தகங்கள் இருந்தன. அதில் ஒரு புஸ்தகத்தை என் தந்தையார் எடுத்தார்; அது தாயுமானவர் பாடலாக இருந்தது. அதைப் பிரித்து என் கையிற் கொடுத்து “இவர்களுக்குப் படித்துக்காட்டு” என்று கூறினார். பிரித்த இடம் ஆனந்தமான பரமென்னும் பகுதி. நான் வாசல் திண்ணையில் உள்ளவர்களுக்கு அப்பகுதியிலுள்ள பாடல்களில் ஒவ்வொன்றையும் தோடி முதலிய ஒவ்வொரு ராகத்தில் வாசித்துக் காட்டினேன். தாயுமானவர் யாவருக்கும் விளங்கும் சொற்களில் தம் அனுபவ உணர்ச்சியை நன்றாக வெளியிட்டுள்ள அப்பாடல்களின் பொருளும், இளமைக்குரிய முறுக்கோடு வெளிவரும் என் தொனியும்