பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

என் சரித்திரம்

அங்கிருந்தவர்களுக்கு இன்பத்தை விளைவித்தன. “அரியிலூர் ஐயர் தம் குமாரரையும் நன்றாகப் பழக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே இவரும் நல்ல நிலைக்கு வருவார்” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். குன்னத்திற் புகுந்த முதல் நாளே ’ஆனந்தமான பரத்’ தைத் துணையாகக் கொண்டு அவர்கள் உள்ளத்திலும் நாங்கள் புகுந்து கொண்டோம்.

ஸ்தலங்கள்

ஸ்தலங்களைப்பற்றிய வரலாறுகளைத் தெரிந்துகொள்வதில் அக்காலத்தினருக்கு அதிக விருப்பம் இருந்தது. ஸ்தலத்தில் விருக்ஷம், மூர்த்திகளின் திருநாமம், வழிப்பட்டவர்கள் வரலாறு, தீர்த்த விசேஷம் முதலிய விஷயங்களை அங்கங்கே உள்ளவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டு மற்றவர்களுக்குச் சொல்வார்கள். தங்கள் ஊர் சிறந்த ஸ்தலமென்றும் பலவகையான மாகாத்மியங்களை உடையதென்றும் சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. குன்னத்தின் ஸ்தல மாகாத்மியங்களை என் தந்தையார் விசாரிக்கத் தொடங்கினார். நானும் அவற்றைத் தெரிந்துகொண்டேன்.

மிகச் சிறந்த ஸ்தலங்களுக்குச் சென்று அங்குள்ள மூர்த்திகள் பால் ஈடுபட்டவர்கள் தங்கள் ஊரிலும் அந்த ஸ்தலங்களைப் போன்ற அமைப்புக்களை உண்டாக்கி வழிபடுதல் பழங்காலத்து வழக்கம். பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சோழ நாட்டிலுள்ள திருநாகேசுவரமென்னும் சிவ ஸ்தலத்தில் ஈடுபாடுடையவர். அவர் சென்னைக்கருகே உள்ள தம் ஊராகிய குன்றத்தூரிலும் ஒரு திருநாகேசுவரத்தை உண்டாக்கினார். நடுநாட்டில் பெண்ணையாற்றங் கரையில் ஸ்ரீரங்கம், ஜம்புகேசுவரம், தாயுமானவர் கோயில் என்னும் மூன்று ஸ்தலங்களுக்கும் பிரதியாக மூன்று ஸ்தலங்கள் உள்ளன. அரியிலூரில் உள்ள ஆலந்துறேசர் கோயில் தேவார ஸ்தலமாகிய கீழைப் பழுவூரிலுள்ள கோயிலைக் கண்டு அமைத்ததே யாகும். இவ்வாறே கும்பகோணத்தில் கும்பேசுவரரைத் தரிசித்த ஒருவர் குன்னத்தில் ஒரு கோயில் நிருமித்து அங்கே பிரதிஷ்டை செய்த மூர்த்திக்கு ஆதி கும்பேசரென்னும் திருநாமத்தையும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்னும் பெயரையும் இட்டனர். அன்றியும் கும்கோணத்துக்குக் கிழக்கே திருவிடைமருதூர் இருப்பது போலக் குன்றத்திற்குக் கிழக்கே வெண்மணி என்னும் ஊர் இருக்கிறது. திருவிடைமருதூருக்கு மத்தியார்ஜு னம் என்று பெயர். அதற்கு வெண்மையாகிய இருதயாகாசத்தின் மத்தியென்று பொருள் செய்து, திருவிடை-