பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணன் காட்சியின் பலன்

89

மருதூர் தகராகாசத்திற்குச் சமானமானதென்று தத்துவார்த்தம் கூறுவர் சிலர். (அர்ஜுனம்-வெள்ளை) வெண்மணி என்னும் பெயர் மத்தியார்ஜுன மென்னும் பெயரோடு ஒருவாறு ஒப்புமையுடையதாகவே, அவ்வூரில் தோன்றிய கோயில் மூர்த்திக்கு ஆதி மகாலிங்கமென்ற திருநாமம் உண்டாயிற்று. மகாலிங்கமென்பது திருவிடை மருதூர் ஸ்வாமியின் திருநாமம். பிருகத் குச நாயகியென்பதே இரண்டிடங்களிலும் உள்ள அம்பிகையின் திருநாமம்.

இத்தகைய அமைப்புக்களால் ஆலய வழிபாட்டைப் பழங்காலத்தில் எவ்வளவு அவசியமானதாகக் கருதின ரென்பதை உணரலாம். என் இளமையிலும் அந்நிலை மாறாமலே இருந்தது.

தானிய வருவாய்

நாங்கள் குன்னத்திற்குச் சென்ற காலம் அறுவடை நாள். அவ்வூரிலுள்ளவர்கள் நவதானியங்களுள் கம்பு, சோளம், சாமை, கேழ்வரகு, தினை முதலியவற்றைத் தங்கள் தங்களால் இயன்றவளவு கொணர்ந்து எங்களுக்கு அளித்தார்கள். அவற்றில் உபயோகப்படுவன போக மிகுந்தவற்றை நாங்கள் விற்று நெல்லாக மாற்றி வைத்துக்கொண்டோம்.

இராமாயணப் பிரசங்கம்

குன்னத்தில் நாட்டாண்மைக்காரர்கள் நான்கு பேர் இருந்தனர். அவர்களும் சிதம்பரம் பிள்ளையும் சேர்ந்து யோசித்து என் தந்தையாரைக் கொண்டு அருணாசலகவி ராமாயணத்தை இரவிற் பிரசங்கம் செய்வித்து செய்வித்துக் கேட்க விரும்பினார்கள் அவ்வாறே பிரசங்கம் தொடங்கப் பெற்றது தினந்தோறும் இரவில் சிதம்பரம் பிள்ளையின் வீட்டுத் திண்ணையில் அது நடைபெற்றது. அக்காலத்தில் என் சிறியதகப்பனாரும் உத்தமதானபுரத்திலிருந்து வந்திருந்தார்.

இராமாயணப் பிரசங்கம் நன்றாக நடந்தது. ஊராருடைய ஆதரவு அதிகமாக இருந்தமையால் என் தந்தையாருக்கு மிக்க ஊக்கம் உண்டாயிற்று. அவரோடு சிறிய தந்தையாரும் சேர்ந்து கொண்டார். நானும் இடையிடையே பாடி வந்தேன். என் சாரீரம் பழக்கத்தால் வன்மை பெற்று வந்தது. அதனால் வரவர இராமாயணப் பிரசங்கத்தில் அதிகமாகப் பாடிவந்தேன். என் பாட்டைக் கேட்டவர்கள், “சிறு பையன் இப்படிப் பாடுகிறானே” என்று ஆச்சரியமடைந்தார்கள். அதனால் எனக்கும் ஊக்கம் உண்டாயிற்று.