பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

என் சரித்திரம்

பிரசங்கத்திடையே என் தந்தையார் கம்பராமாயணத்திலிருந்து உசிதமான செய்யுட்களை இசையோடு சொல்லுவார். அக்காலத்தே சாதாரண ஜனங்களுக்கும் கம்பராமாயணத்திலே சுவை இருந்தமையால் அவருடைய பிரசங்கம் சபையோருடைய மனத்தை மிகவும் கவர்ந்தது. குன்னத்திலுள்ளோரும் அயலூரினரும் கூட்டமாக வந்து கூடினர். தந்தையார் சந்தோஷத்தின் உச்சியிலிருந்து கதையை நடத்தி வந்தார். ஒவ்வொரு நாளும் ஜனங்களுக்கு உண்டான திருப்தி அதிகமாயிற்று.

இரண்டு மாத காலமாக இராமயணப் பிரசங்கம் நிகழ்ந்து வந்தது. யுத்த காண்டம் நடைபெறுகையில் ஒரு நாள். அனுமார் சஞ்சீவி மலையைக் கொணர்ந்து, பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு கிடந்த லக்ஷ்மணர் முதலியோரை எழுப்பின கட்டம் வந்தது. லக்ஷ்மணர் பிரம்மாஸ்திரத்தாற் கட்டுண்டு வீழ்ந்தது கண்டு இராமர் அடைந்த சோகத்தையும், அவர் சோகத்தால் மூர்ச்சையுற்றுக் கிடந்ததையும் கேட்டவர்கள் உருகினார்கள். தம்முடைய அநுபவத்தில் எவ்வளவோ துன்பங்களை உணர்ந்து புண்பட்டவராகிய என் தந்தையார் அந்தச் சோக ரஸத்தைத் தாமும் அநுபவித்துப் பிறரும் அநுபவிக்கச் செய்தார். சோகம் நிரம்பிய அச்சமயத்தில் ’அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்தார்; அதன் காற்றுப் பட்ட மாத்திரத்திலே லக்ஷ்மணர் முதலியோர் உயிர்த்து எழுந்தனர்’ என்ற விஷயம் வரும்போது சோகக் கடலில் ஆழ்ந்திருந்த ஜனங்கள் அனைவரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவர்கள் இராமாயணக் கதையைக் கேட்பவர்களாகத் தோற்றவில்லை. போர்க்களத்தில் இருந்து இராமலஷ்மணர்கள் சோகத்தைக் கண்டு துயருற்றும் அனுமாரது வீரத்தைக் கண்டு சந்தோஷமடைந்தும் நிற்பவர்களைப்போல இருந்தனர். என் தந்தையாருக்கோ அரியிலூரைவிட்டுப் பிரிந்ததனால் உண்டான துயரம் பிரம்மாஸ்திரம் போல இருந்தது; குன்னத்திற் பெற்ற ஆதரவு சஞ்சீவி மலையைப் போலாயிற்று. இவ்வாறு துன்பமும் அதனைப் போக்கி நிற்கும் இன்பமும் அநுபவத்திலே ஒரு யுத்தக்காண்டத்தை உண்டாக்கினமையால் என் தந்தையார் அந்த அநுபவத்தைக் கொண்டு மிகவும் ரஸமாகப் பிரசங்கம் செய்தார். சோகரஸம் உள்ள இடங்களில் தாமே சோகமுற்றும் சந்தோஷச் செய்தி வருமிடங்களில் தாமே மகிழ்ச்சியுற்றும் அவர் செய்த கதாப்பிரசங்கம் கேட்டவர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.

அன்று கதை முடிந்தவுடன் எல்லோரும் என் தந்தையாரைப் பற்றிப் பாராட்டிப் பேசியதற்கு அளவில்லை. சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள், “இந்த இராமாயணம் இன்னும் சில நாட்களிற்