பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தருமம் வளர்த்த குன்னம்

93

இல்லை. அவருடைய கதாப்பிரசங்கத்திற்கு மதிப்பு உயரஉயர அன்பர்களது ஆதரவு விரிவு பெற்றது. நான் சுறுசுறுப்புள்ளவனாகவும் கல்வியில் விருப்பமுள்ளவனாகவும் இருப்பதை உணர்ந்த அவருக்கு என் கல்வியபிவிருத்தியில் ஊக்கமும் கவலையும் இருந்தன. சங்கீதத் துறையில் எனக்குப்பழக்கம் மிகுதியாகி வந்தாலும் தமிழில் தனி விருப்பம் இருப்பதை அவர் அறிந்து கொண்டாரென்றே தோற்றியது அதனால் தம்முடைய கதாப்பிரசங்கங்களுக்கு என்னை உதவியாக வைத்துக்கொண்டதோடு தமிழ் நூல்களை நான் கற்றுவருவதற்குரிய ஏற்பாடும் செய்யத் தொடங்கினார்.

சிதம்பரம் பிள்ளையிடம் பாடம் கேட்டது

சிதம்பரம் பிள்ளையின் நட்பு எங்களுக்கு உண்டானதில் பல லாபங்கள் கிடைத்தன. அவர் தமிழிற் பயிற்சியுடையவர்; சில பிரபந்தங்களிலும் திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களிலும் சிறந்த பழக்கத்தைப் பெற்றிருந்தார். அவரிடம் நான் பாடம் கேட்கத் தொடங்கினேன். முதலிற் சில சிறு நூல்களைக் கேட்டுவிட்டுப் பிறகு திருவிளையாடற் புராணத்தை முறையாகக் கேட்டு வரலானேன். அவ்வூரிலிருந்த முத்தப் பிள்ளை என்ற அன்பர் நான் கேட்டுக்கொண்டபடி திருவிளையாடற் புராணப் புஸ்தகம் ஒன்றும் குறள் மூலமும் எனக்கு அளித்தார்; குறள் தெளிபொருள் விளக்கவுரைப் புஸ்தகம் ஒன்றையும் சில காலம் படித்துவிட்டுத் தரும்படி கொடுத்தார். அதை வைத்துக் குறளைப் படித்து வந்தேன்.

உதவிக் கணக்கு

என் வாழ்க்கையில் எனக்கு ஜீவனத்திற்கு ஏற்ற வழிகள் சில தெரிந்திருக்க வேண்டுமென்பது என் தகப்பனார் விருப்பம். “நாலு வித்தை தெரிந்திருந்தால் சமயம்போல் ஏதாவது ஒன்றைக்கொண்டு பிழைக்காலம்” என்பது அவர் எண்ணம். சங்கீதமும் தமிழும் ஒருகால் என் ஜீவனத்துக்கு உபயோகப் படாவிட்டால் வேறொரு தொழில் இருந்தால் நல்லதென்று அவர் நினைத்தார் போலும்! அக்காலத்தில் கிராமக் கணக்குப் பிள்ளைக்கு இருந்த கௌரவமும் செல்வாக்கும் மிக அதிகம். கணக்குப் பிள்ளையே ஒரு கிராமத்தில் பிரதான புருஷர். அவர் வைத்தது சட்டம். அவருக்கு அபசாரம் பண்ணினவன் தப்ப முடியாது. ஆதலால் இங்கிலீஷ் படிக்காத எனக்கு ஒரு கணக்குப்பிள்ளை வேலை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என் தந்தையார் மனோபாவம் அப்படியெல்லாம் விரிந்து சென்றது.

அரியிலூரிலேயே நான் ஒருவரிடம் கணக்குப் பழக்கம் செய்து வந்தேனல்லவா? அப்பழக்கத்தை விட்டுவிடாமல் குன்னத்திலும்