பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தருமம் வளர்த்த குன்னம்

95

அங்கங்கே நீரோடைகள் உண்டு. அவற்றின் கரையிலே படர்ந்திருக்கும் பசுஞ்செடிகளின் காட்சியில் நான் ஊன்றி நிற்பேன். தினந்தோறும் காலையில் எழுந்து அவ்விடங்களுக்குச் சென்று பத்திர புஷ்பங்களை எடுத்து வந்து என் தந்தையார் பூஜைக்குச் சேர்ப்பிப்பேன்!

குன்னத்தில் என் மனத்திற்கு உத்ஸாகம் உண்டாவதற்கு மேலே கூறிய நிகழ்ச்சிகள் காரணமாயின. அடிக்கடி அவ்வூருக்கு வருவோர்களுடைய பழக்கத்தாலும் எனக்கு நன்மை உண்டாயிற்று.

தருமங்கள்

திருவையாறு முதலிய இடங்களிலுள்ள வைதிக பிராமணர் சிலருக்குக் குன்னத்தில் மான்யங்கள் இருந்தன. வருஷந்தோறும் அவர்கள் வந்து சில தினம் அங்கே தங்கிக் குத்தகைக்காரர்களிடமிருந்து தமக்குரிய தொகையைப் பெற்றுச் செல்வார்கள். அவர்களுக்கு ஊரினரும் பொருள் உதவி செய்வதுண்டு.

நாட்டாண்மைக்காரரிடம் ஊரின் பொதுப்பணம் இருக்கும். ஊரினர் தங்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களிலும் அறுவடைக் காலங்களிலும் தங்களுக்குரிய பங்கை உதவுவார்கள். அத்தொகைகளெல்லாம் பொதுப்பணமாக இருக்கும். வெளியூர்களிலிருந்து வரும் வித்துவான்களையும் பெரியோர்களையும் ஆதரிப்பதற்கும், ஊரின் பொதுச் செலவுகளுக்கும் அப்பணம் உபயோகமாகும்.

கிராமத்தில் தருமம் பொதுச்சொத்தாக இருக்கும்போது அங்கே பொருளுதவி பெற வருபவர்களுக்குக் குறைவு ஏது? மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்து அழைப்பாரும் வேண்டுமோ?

தருமத்தை இவ்வாறு வளர்த்து வந்த கிராமங்களுள் குன்னம் ஒன்று. அங்கே அடிக்கடி புலவர்களும் கவிராயர்களும் பாகவதர்களும் இவர்களைப் போன்றவர்களும் வந்து சில தினம் இருந்து தங்கள் தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்வார்கள்.

புலவர் வருகை

திருநெல்வேலியைச் சார்ந்த புளியங்குடி முதலிய இடங்களிலிருந்தும் கோயம்புத்தூர், சேலம் முதலிய இடங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாகவும் இருவர் மூவராகவும் தனியாகவும் புலவர்கள்