பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தருமம் வளர்த்த குன்னம்

97

உடன் வந்தனர். பழங்காலத்தில் புலவர்களுக்கு அரசர் பல்லக்கு அளித்தனரென்று நான் கேட்டிருந்தேன். “இக்காலத்திலும் இந்தச் சிறப்பைப்பெற்றுள்ள இவர் பெரும்புலவராகத்தான் இருக்க வேண்டும். இவரிடமிருந்து பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளலாம்” என்று நான் சந்தோஷம் அடைந்தேன்.

சிவிகை சிதம்பரம் பிள்ளை வீட்டு வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்த புலவர் கீழே இறங்கினார். அதற்குள் அவருடைய மாணாக்கர் சிலர் தாம் கொணர்ந்திருந்த ஒரு விரிப்பை எடுத்துத் திண்ணையில் விரித்தார். ஒருவர் திண்டைக் கொணர்ந்து சாத்தினார். புலவர் மிகவும் கம்பீரமாகத் திண்ணையில் வந்து அமர்ந்தார். மற்றவர்கள் கை கட்டிக்கொண்டு நின்றார்கள். சிலர் வாரிய பனையேடும் கையுமாக நின்றார்கள். இக்கூட்டத்தைக் கண்டு ஊரார் கூடி விட்டனர்.

சிதம்பரம் பிள்ளை வந்து புலவரைக் கண்டார். “நீங்கள் எந்த ஊர்?” என்று விசாரித்தார்.

அவர், “நாம் பிறந்தது திரிபுவனம்; பிரதாப சிம்ம மகாராஜாவின் ஆஸ்தான வித்துவான்; வரகவி” என்று கூறினார். அப்பால் சிதம்பரம் பிள்ளை விஷயமாகத் தாம் இயற்றி வந்த செய்யுட்களை அவர் சொன்னார்.

அவருடைய ஆடம்பரமும் தொனியும் சூழ்ந்திருக்கும் பரிவாரத்தின் படாடோபமும் அவர் ஒரு ஸமஸ்தானத்து வித்துவானாகவே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை யாவருக்கும் உண்டாக்கின. ஆனால் அவர் கூறிய செய்யுட்கள் அவருடைய உண்மையான சக்தியை வெளிப்படுத்தின. சிதம்பரம் பிள்ளை நல்ல தமிழறிவுடையவராதலின், “இவர் வெறும் ஆடம்பரப் புலவர்” என்பதை உணர்ந்து கொண்டார். அவர் கூறிய விருத்தம் ஒன்றில் நாலடிகளும் ஒத்து இராமல் இரண்டு அடிகள் அளவுக்கு மேற்பட்ட சீர்களை உடையனவாக இருந்தன. சிதம்பரம் பிள்ளை அப்புலவரை நோக்கி, “இவற்றில் சீர்கள் அதிகமாக இருக்கின்றனவே!” என்று கேட்டார்.

அவர் சிறிதும் அஞ்சாமல், “தங்களுக்கு சீர் அதிகமாக வேண்டுமென்று பாடியிருக்கிறேன். சீரைக் குறைத்து விடலாமோ?” என்று விடை கூறினார். கூறிவிட்டு அயலில் நின்றவர் முகங்களை நிமிர்ந்து பார்த்தார். சிதம்பரம்பிள்ளை மேலும் சில கேள்விகளைக் கேட்டார். புலவரோ சம்பந்தமில்லாத விடைகளை உரத்த குரலிற் சொன்னார். சிலருக்குச் சிதம்பரம் பிள்ளை கேட்ட வினாக்களுக்கு அப்புலவர் அநாயாசமாக விடை சொல்லுகிறாரென்றே தோன்றியது.

என்—7