பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அத்தியாயம்—18

குன்னத்தில் அடைந்த தமிழ்க் கேள்வி

குன்னத்திற்கு அடிக்கடி வித்துவான்கள் பலர் வருவார்கள். அவர்களுள் கதிர்வேற் கவிராய ரென்பவர் ஒருவர். அவர் மூலமாக நான் பல விஷயங்களை அறிந்துகொண்டேன். சேலத்தைச் சார்ந்த சார்வாய் என்னும் ஊரிலே குமாரசாமிக் கவிராயர் என்ற தமிழ் வித்துவான் ஒருவர் இருந்தார். அவர் அரியிலூரிலும் உடையார்பாளையத்திலும் சில காலம் ஸமஸ்தான வித்துவானாக விளங்கினார். அவருடைய மாணாக்கரே கதிர்வேற் கவிராயர். குன்னத்தில் அவரை நான் பார்த்த போது அவருக்கு எழுபது பிராயம் இருக்கும். அம்முதுமையிலும் அவர் தமிழ்ச் செய்யுட்களைச் சொன்ன முறை கேட்பதற்கு இனிமையாகவே இருந்தது. கம்பராமாயணம், முதலிய இலக்கியங்களிலும் நன்னூல் முதலிய இலக்கணங்களிலும் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. நூற்றுக்கணக்கான பாடல்கள் அவருக்கு மனப்பாடமாக இருந்தன; பழைய தனிப்பாடல்கள் பலவற்றை அவர் தடையின்றிச் சொல்லி வருவார்; செய்யுள் இயற்றும் பழக்கமும் உடையவர்; ஓய்ந்த நேரங்களிலெல்லாம் ஏதேனும் செய்யுளைப் புதிதாக எழுதிக்கொண்டிருப்பார்.

அக்கவிராயர் ஒருமுறை குன்னத்துக்கு வந்து கணக்குப் பிள்ளை வீட்டில் சில தினங்கள் தங்கியிருந்தார். அவருடைய பழக்கத்தாற் பல தமிழ்நூற் பெயர்களை நான் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு நூலைப்பற்றியும் அவர் சொல்லும்போது எனக்குப் புதிய புதிய இன்பம் உண்டாகும். “இவ்வளவு நூல்கள் தமிழில் உள்ளனவா!” என்று ஆச்சரியமடைவேன்.

தனிப்பாடல்களை அவர் சொல்லும்போது ஒவ்வொரு பாடலையும் இயற்றிய புலவரைப் பற்றிய வரலாறு, அதைப் பாடியதற்குக் காரணம் முதலிய விஷயங்களை மிகவும் சுவைபடச் சொல்லுவார். அப்போது வாயில் ஈப்புகுவதுகூடத் தெரியாமல் நான் கேட்டுக்கொண்டிருப்பேன். அத்தனிப் பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கற்கண்டுக் கட்டிபோல் இருக்கும். ’பாடம் செய்து’ என்ற முயற்சியில்லாமலே பல பாடல்கள் என் மனத்தில் தாமே பதிந்தன. அம்முதியவர் அவ்வளவு பாடல்களைச் சலிப்பின்றிச் சொல்வதைக் கேட்டு, அவ்வளவையும் மனத்திற் பதித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. கவிராயர் பின்னும் ஒரு மாதமோ இரண்டு மாதங்களோ தங்கியிருந்தால் நான்