பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

என் சரித்திரம்

குன்னம் வந்தவர்; கஸ்தூரி ஐயங்காருடைய நண்பர்; தமிழிலும் சங்கீதத்திலும் வல்லவர்; கவித்துவ சக்தியும் உள்ளவர். அவரைக் கண்டவுடன் கஸ்தூரி ஐயங்கார் அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் அவரிடம் தெரிவித்தார். அவர் அதைக் கேட்டதுதான் தாமதம்; உடனே எந்தையாரை நோக்கி, “அடடா, மிகவும் சந்தோஷம்! நீங்கள் அப்படி வந்தால் என்னால் ஆன அனுகூலத்தை நானும் செய்விக்கிறேன்; தமிழ்ப் பாடமும் இவனுக்குச் சொல்லுகிறேன்” என்று வாக்களித்தார்.

ஒருவரையொருவர் அன்பிலும் ஆதரவிலும் தரும சிந்தையிலும் மிஞ்சியிருப்பதை யறிந்தபோது, “இனி நமக்கு நல்ல காலந்தான்” என்று நான் நிச்சயஞ் செய்துகொண்டேன்.

“நல்ல நாள் பார்த்துக்கொண்டு வந்து விடுங்கள்” என்று என் தந்தையாரிடமும், “வருகிறாயா? வா” என்று என்னிடமும் கூறிவிட்டுக் கஸ்தூரி ஐயங்கார் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றனர்.

கஸ்தூரி ஐயங்கார் சென்ற திக்கையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தூரத்தில் மறைய மறைய என் மனத்துள் கார்குடியைப் போன்ற தோற்றம் ஒன்று உண்டாயிற்று. என் தமிழ்க் கல்வியின் பொருட்டு எந்த இடத்துக்குச் செல்வதற்கும் என் தந்தையார் சித்தமாக இருந்தார்.

அத்தியாயம்—19

தருமவானும் லோபியும்

கார்குடி சென்றது

கார்குடிக்குப் போவதில் எனக்கிருந்த வேகத்தை அறிந்து என் தந்தையார் ஒரு நல்ல நாளில் என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அவ்வூரை அடைந்தார். நாங்கள் வருவோ மென்பதை முன்னமே கஸ்தூரி ஐயங்கார் மூலம் அறிந்திருந்த அவ்வூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் எங்களை உபசரித்து எங்கள் வாசத்துக்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

அங்கே ஸ்ரீநிவாஸையங்கார் என்ற ஒரு செல்வர் வீட்டில் நாங்கள் ஜாகை வைத்துக்கொண்டோம். அக்கிரகாரத்தாரிடமிருந்து உணவுப் பொருள்கள் மிகுதியாக வந்தன. அங்கிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் யாவரும் சுரோத்திரியதார்கள். மாதந்தோறும் எங்கள் தேவைக்குரிய நெல்லை அவர்கள். தம்முள் தொகுத்துக் கொடுத்து வந்தார்கள்.