பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தருமவானும் லோபியும்

105



கஸ்தூரி ஐயங்கார் பாடம் சொன்னது

கஸ்தூரி ஐயங்கார் நன்னூரில் நல்ல பயிற்சியுடையவர். தஞ்சாவூரில் இருந்த இலக்கணம் அண்ணாப் பிள்ளையென்ற வித்துவானும் அவரும் இலக்கண, இலக்கிய விஷயமான செய்திகளை ஓலையில் எழுதி வினாவுவதையும் விடையளிப்பதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். அவ்வோலைகளை நானும் பார்த்திருக்கிறேன். இராமாயணம், பாரதம், பாகவதம் முதலிய நூல்களைத் தம் கையாலேயே கஸ்தூரி ஐயங்கார் ஏடுகளில் எழுதி வைத்திருந்தார். ஐயங்காரிடம் நான் பாடங் கேட்கத் தொடங்கினேன். குன்னத்திலிருந்தபோது தஞ்சையிலிருந்து வந்த ஸ்ரீநிவாஸையங்கா ரென்பவரிடம் மகாலிங்கையர் இலக்கணத்தைப் பாடம் கேட்டேன். நன்னூல் முதலிய இலக்கணங்களைத் தொடர்ந்து கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்து வந்தது. அதனால் முதல் முதல் அவரிடம் நன்னூல் பாடங் கேட்கலானேன். விசாகப் பெருமாளையர் இயற்றிய காண்டிகையுரையை ஒருவாறு பாடம் சொல்லி அதன் கருத்துரை, விசேஷ உரை முதலியவற்றை எனக்குப் பாடம் பண்ணி வைத்துவிட்டார். தினந்தோறும் நன்னூல் முழுவதையும் ஒருமுறை நான் பாராமற் சொல்லி வந்தேன். நிலவில் பொருள்கள் காணப்படுவதுபோல் நன்னூலிலுள்ள இலக்கணங்கள் எனக்குத் தோற்றின; அந்நூலைச் சிக்கறத் தெளிந்துகொள்ள வில்லை. படித்தவர் யாரேனும் வந்தால் கஸ்தூரி ஐயங்கார் எனக்குப் பாடம் சொல்லிய நன்னூல் சூத்திரங்களையும் உரையையும் என்னைச் சொல்லும்படி செய்வார். அவற்றை நான் ஒப்பிப்பேன். இப்பழக்கத்தால் அவை என் மனத்திற் பின்னும் நன்றாகப் பதிந்தன.

அக்காலத்தில் நன்னூலுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஐயமற அதனை ஒருவன் தெரிந்துகொண்டால் அவனை நல்ல புலவனென்று யாரும் கூறுவர். சூத்திரங்களில் விசேஷ உரைகளிலுள்ள ஆக்ஷேப சமாதானங்களை நன்றாகத் தெரிந்துகொண்டு விளக்குபவர்கள் சிலரே இருந்தனர். இலக்கியப் பயிற்சியிலேயே பெரும்பாலோருக்குக் கவனம் சென்றதேயன்றி இலக்கணப் பயிற்சியிற் செல்லவில்லை. இந்த நிலையில் நான் நன்னூற் சூத்திரங்களையும் உரையையும் மனனம் பண்ணித் தமிழில் ‘இலக்கண வித்துவான்’ ஆகக் கூடுமென்ற எண்ணம் என்னைக் கண்டோருக்கு உண்டாக்கினேன். அத்துறையில் நான் பின்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியதுண்டென்பதை நான் மறக்கவில்லை.