பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

என் சரித்திரம்

கஸ்தூரி ஐயங்காரிடம் நவநீதப் பாட்டியல் முதலிய பொருத்த நூல்கள் சில இருந்தன. எனக்கு அவற்றிலும் சிறிது பழக்கம் உண்டாயிற்று. இடையிடையே வேங்கட வெண்பா முதலிய சில பிரபந்தங்களையும் அவர் கற்பித்து வந்தார்.

சாமி ஐயங்காரிடம் கேட்ட பாடம்

கஸ்தூரி ஐயங்காருடைய நண்பரான சாமி ஐயங்காரும் எங்களிடம் மிக்க அன்போடு இருந்து வந்தார். தாம் வாக்களித்தபடியே அவரும் எனக்குப் பாடம் சொல்லலானார். கம்பராமாயணத்தில் அவர் பழக்கமுள்ளவர். என் தந்தையாரும் நானும் இராமாயண கதாப்பிரசங்கத்தில் ஈடுபட்டவர்களாதலின் கம்பராமாயணத்தைப் பாடங் கேட்கவேண்டு மென்ற விருப்பம் எனக்கு இருந்தது. இராமாயணத்திற் பாலகாண்டத்திலிருந்து தொடங்காமல் சுந்தரகாண்டத்திலிருந்து ஆரம்பிப்பது ஒரு முறை. அதன்படியே சாமி ஐயங்காரிடம் நான் சுந்தர காண்டம் பாடம் கேட்க ஆரம்பித்தேன். அவர் இசையோடே பாடல் சொல்லுவார். அது மிகவும் நயமாக இருக்கும். திருவரங்கத்தந்தாதியில் முதல் இருபத்தேழு செய்யுட்களுக்கு அவரிடம் பொருள் கேட்டுத் தெரிந்துகொண்டேன். “இதற்கு மேல் நான் பாடம் கேட்டதில்லை; அரியிலூர்ச் சடகோபையங்கார் முழுவதும் பாடம் சொல்வார்; அவரைப் பார்க்கும்போது நீ மற்றப் பாடல்களைக் கேட்டுக்கொள்ளலாம்” என்று அவர் கூறியமையால் இருபத்தெட்டாம் செய்யுள் முதலியவற்றை நான் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் யாரிடமேனும் அந்நூல் முழுவதையும் கேட்டுவிட வேண்டுமென்ற குறை மட்டும் எனக்கு இருந்தது.

புதிய நூல்களையும் புதிய விஷயங்களையும் நான் தெரிந்துகொண்டே னென்பது உண்மையே. ஆனால் அவற்றை ஐயந்திரிபின்றித் தெளிவாகவும் சாங்கோபாங்கமாகவும் தெரிந்துகொள்ள வில்லை. படித்து அறிவு பெறுவது ஒரு வகை. படித்தவற்றைப் பாடம் சொல்வது ஒரு வகை. பாடஞ்சொல்லும் திறமை சிலரிடமே சிறப்பாகக் காணப்படுகின்றது.

கார்குடியில் ஆறு மாதங்கள் இருந்தோம். கஸ்தூரி ஐயங்காரும் சாமி ஐயங்காரும் தங்கள் தங்களால் இயன்ற அளவு பாடம் சொல்லி வந்தார்கள். அவர்களுடைய மனைவிமார்களும் படித்தவர்கள். அவர்களும் என்னிடம் பிரியமாக இருந்தார்கள். எனக்குத் தெரிந்த பல கீர்த்தனங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துப் பாடிக் காட்டினேன்.