பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

என் சரித்திரம்

அந்த அளவிற்கு அவற்றைப் பயன்படுத்திப் பொருள்கூறத் தொடங்கினர். இராமாயணக் கீர்த்தனத்திற்குப் பொருள் சொல்லுகையில் மேற்கோளாக வேறு கீர்த்தனங்களைச் சொல்வார்; பல தமிழ்ப் பாடல்களையும் ஸம்ஸ்கிருத சுலோகங்களையும் எடுத்துக் காட்டுவார். அத்தகைய சந்தர்ப்பங்களில் உதாரணமாகச் சொல்லவேண்டிய பாடல்களுக்கு அவர் முதலெடுத்துத் தருவார்; நான் அவர் குறிப்பை அறிந்து அவற்றைப் பாடிக் காட்டுவேன். என் சாரீரமும் நான் பாடல் சொல்லும் முறையும் சபையினருக்கு மிக்க திருப்தியை அளித்தன என்பதை அவ்வப்போது சில குறிப்பால் தெரிந்துகொள்வேன். எனக்கு அப்போது உண்டாகும் உத்ஸாகம் அடுத்த முறை நான் பாடல் சொல்லுகையில் வெளிப்படும். பணமாகவும் பிற பொருளாகவும் பெறும் லாபத்தைக் காட்டிலும் அபிமானத்தினால் வெளியிடப் பெறும் பாராட்டையே பெரிய ஊதியமாகக் கருதும் இயல்பு மனிதர் யாவரிடத்தும் காணப்படுகின்றது. இளமைப் பருவத்தில் அக்கருத்து என்பால் மிகுதியாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

களத்தூரில் இராமாயண பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமையங்காரும் பிறரும் நூறு வராகன் (350) ரூபாய் தம்முட் சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். அதற்கு முன்பெல்லாம் இருபது வராகனே சம்மானமாகக் கிடைத்து வந்தது. அம்முறை என் தந்தையார், சிறிய தந்தையார், நான் ஆகிய மூவரும் சேர்ந்து வெளிப்படுத்திய சங்கீதத் திறமை முதலியவற்றாலும் என் விவாகப் பிரயத்தனத்தினாலும் அதிகமாகச் சம்மானம் கிடைத்தது. கிடைத்த 350 ரூபாயில் செலவுக்கு 150 ரூபாய் போக எஞ்சிய 200 ரூபாயை விவாக காலத்துப் பெற்றுக்கொள்வதாக ராமையங்காரிடமே தந்தையார் கொடுத்து வைத்திருந்தார்.

நந்தன் சரித்திரப் பிரசங்கம்

இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் பலர் நந்தனார் சரித்திரம் சொல்லும்படி என் தந்தையாரைக் கேட்டுக்கொண்டனர். அக்காலத்தில் நந்தனார் சரித்திரம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அதன் ஆசிரியராகிய கோபாலகிருஷ்ண பாரதியார் என் தந்தையாருடைய நண்பராதலின் அச்சரித்திரத்தை என் தந்தையார் நன்றாகச் சொல்வாரென்பதை யாவரும் தெரிந்துகொண்டிருந்தனர். அதிலுள்ள கீர்த்தனங்களை அதன் ஆசிரியர் அமைத்த சங்கீத அமைப்புப்படியே எந்தையார் பாடுவார்.