பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விவாக முயற்சி

117


பாரதியார் நந்தனார் சரித்திரத்தை இயற்றுதற்குக் காரணம் இன்னதென்பது, அதனை இயற்றிய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் முதலியவற்றை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதும், இராமாயணப் பிரசங்கத்தின்போது அச்சரித்திரக் கீர்த்தனங்களைச் சொல்லிக்காட்டுவதும் உண்டு. பாரதியார் காரைக்காலுக்குச் சென்று அங்கிருந்த கலெக்டராகிய ஸிஸே துரைக்கு முன் நந்தன் சரித்திரத்தை நடத்தினா ரென்றும், அது கேட்டு அத்துரை மயங்கி அவரைப் பாராட்டிக் கொண்டாடினாரென்றும், பின்பு அத்துரையின் முயற்சியால் அச்சரித்திரம் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதென்றும் சொல்லுவார்.

பாரதியார் என் தந்தையாருக்கு அச்சரித்திரத்தின் அச்சுப் பிரதி ஒன்றை அளித்திருந்தார். அதை அவர் மிகவும் ஜாக்கிரதையாக வைத்துப் பாதுகாத்து வந்தார். அப்பிரதி இன்னும் என்னிடத்தில் உள்ளது.

அன்பர்களது விருப்பப்படியே நந்தனார் சரித்திரம் ஆரம்பிக்கப் பெற்றது. என் தந்தையார் சிவபக்தியில் நன்கு ஊறினவராதலின் அச்சரித்திரத்திலே செறிந்து கிடக்கும் பக்திச் சுவையை நன்றாக வெளிப்படுத்தினார். இளம் பருவமுடையவர்களையும் உருக்கும் அமைப்பையுடையது அச்சரித்திரம். அதில் ஜனங்கள் அதிகமாக ஈடுபட்டனர். வர வரக் கூட்டம் மிகுதியாயிற்று. இப்பிரசங்கத்தைக் கேட்டவர்கள் நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களில் ஒன்றையேனும் பலவற்றையேனும் பாடம் பண்ணிக்கொண்டு பாடி உருகலாயினர். சங்கீதத்தின் வாசனையே அறியாதவர்களும் அவற்றை வாய்விட்டுச் சொல்வதில் ஓர் இன்பத்தை அடைந்தனர்.

நான் எங்கேயாவது போய்க்கொண்டிருப்பேன்; எங்கேயிருந்தோ, “பித்தந் தெளிய மருந்தொன்றிருக்குது” என்று ஒரு தொனி உண்டாகும். மற்றோரிடத்தில் அபஸ்வரத்தில் “சிவலோக நாதனைக் கண்டு” என்று ஒரு குரல் எழும்பும். கிழவர்களைக் காணும்போது சில இளைஞர்கள், “மீசை நரைத்துப் போச்சே கிழவா-ஆசை நரைக்கலாச்சோ” என்று பாடத் தொடங்கிவிடுவார்கள். சில இளம்பிள்ளைகள், “மார்கழி மாதந் திருவாதிரை நாள் வரப் போகுதையே” என்று சொல்லிக்கொண்டு ஆடுவார்கள். வேதாந்த சாஸ்திரப் யிற்சியுள்ளவர்கள், “வாசியாலே மூலக் கனல் வீசியே சுழன்றுவர” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். இப்படி இளம்பிள்ளைகள், காளைப் பருவமுடையவர்கள், வயசு வந்தவர்கள், கிழவர்கள் ஆகிய எல்லோருடைய மனத்திலும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்கள் புகுந்து விளையாடின. ஒன்றும்