பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

என் சரித்திரம்

தம்முடைய பந்துக்களிடத்தும் நண்பர்களிடத்தும் அழைத்துச்சென்று உசிதமான வரும்படிகளைச் செய்வித்தனர். இயல்பாகவே அப்பக்கங்களிலுள்ளவர்கள் எந்தையாரிடம் அன்பு பூண்டு ஆதரித்தனர். சிதம்பர உடையாருடைய பழக்கம் அந்த ஆதரவைப் பின்னும் பெருகச் செய்தது.

ஜகந்நாத உடையார்

அக்காலத்தில் திரு ஆலந்துறை என்னும் ஸ்தலத்தில் கோயில் தர்மகர்த்தாவாக இருந்த ஜகந்நாத உடையார் என்பவர் எந்தையாரை அக்கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்து என் விவாகச் செலவுக்கென்று ஐம்பது ரூபாய் அளித்தனர்.

களத்தூரில் இருந்தபோது என் தாயாருக்கு முடக்கு ஜ்வரம் வந்து சிலநாள் கஷ்டப்பட்டார். அப்பால் தாளம்மையால் சிலநாள் துன்புற்றார். அக்காலங்களில் நானே சமையல் செய்வேன்; என் தாயாருக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்து வருவேன்.

கார்குடி சென்று வந்தது

களத்தூரிலிருந்து கார்குடியிலுள்ள அன்பர்களைப் பார்க்கும்பொருட்டு மீண்டும் அவ்வூருக்குச் சென்றோம். அங்கே சிலநாள் தங்கினோம். அவ்வூரினர் ஐம்பது ரூபாய் என் விவாகச் செலவுக்காக அளித்தார்கள். பின்பு களத்தூருக்கே வந்து சேர்ந்தோம்.

விவாக முயற்சி

என் தந்தையார் இடையிடையே பெண் பார்ப்பதற்காகப் பந்துக்களுள்ள வெளியூர்களுக்குச் சென்று விசாரித்துக்கொண்டு வருவார். நானும் என் தாயாரும் களத்தூரில் இருந்தோம். நான் வழக்கம்போலவே தமிழ்நூல்களைப் படித்துக்கொண்டு வந்தேன். ‘நமக்கு ஏற்ற ஆசிரியர் ஒருவரும் கிடைக்கவில்லையே!’ என்ற எண்ணம் எனக்குண்டாகி நாளாக நாளாக அதிகரித்தது. எனக்கு விவாகம் செய்விக்கும் முயற்சியில் என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் ஈடுபட்டிருந்தனரென்பதை அறிந்தபோது எனக்குச் சந்தோஷமும் உண்டாகவில்லை; வருத்தமும் உண்டாகவில்லை. விவாகம்பண்ணிக்கொண்டு கிருகஸ்தன் என்று பெயர் வாங்கிக்கொள்வதில் அக்காலத்தில் ஒரு பெரிய கௌரவம் இருந்தது, பதினாறு வயசுடைய ஒருவன் விவாகமாகாமல் பிரமசாரியாக இருந்தால் ஏதோ பெரிய குறையுடையவனைப்போல அக்காலத்தவர் எண்ணினார்கள்.