பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிதம்பர உடையார்‌

121

காலப்போக்கோடு கலந்து வாழும் மனிதர்களுடைய கொள்கைகள் என்றும் ஒரேநிலையாக நிற்பதில்லை. அக்காலத்தில் எதைக் கௌரவமென்று நினைத்தார்களோ அதையே இக்காலத்தில் பைத்தியக்காரத்தனம் என்று நினைக்கிறோம். அகௌரவமான செயல் என்று எதை முன்பு நினைத்து விலக்கினார்களோ அதையே கௌரவமென்று இப்போது மேற்கொள்ளுகிறோம்.

என் தகப்பனார் பல மாதங்களாகப் பெண் தேடினார்; பல ஜாதகங்களைப் பார்த்தார். ஒன்றும் பொருத்தமாக இல்லை. ஒருவாறு விவாகச் செலவுக்கு வேண்டிய பொருளைச் சேகரித்து வைத்துக்கொண்ட அவருக்கு அப்போது ‘பெண் கிடைக்கவில்லையே’ என்ற சிந்தனை அதிகமாயிற்று. எனக்கு விரைவில் விவாகமாகாவிட்டால் ஏதோ பெரிய நஷ்டம் வந்துவிடும் என்பது போன்ற நினைவு அவருக்கு இருந்தது போலும்! நாங்கள் ஸ்திரமாக ஓர் ஊரில் வாழவில்லை; நானோ மேற்கொண்டு தமிழைத் திருப்தியுண்டாகும்படி கற்றுக்கொள்ளவில்லை; எங்கள் வாழ்க்கையில் எந்த வகையான நிலையும் உண்டாகவில்லை. இவைகளுக்கிடையே பின்னும் சில வருஷங்கள் கல்யாணம் செய்யாமலே இருந்தால் ஒரு குறையும் நேரப்போவதில்லை. இந்நிலையில் நான் பிரமசாரியாக இருப்பது ஒரு பெருங்குறையாக என் தந்தையாருக்குத் தோற்றியதற்குக் காரணம் அக்காலத்திலிருந்த வழக்கந்தான்.

விவாக நிச்சயம்

எங்கெங்கோ தேடிய பிறகு கடைசியில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மாளாபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து ஜாதகம் பொருந்துவதை உணர்ந்து நிச்சயம்செய்து என் தந்தையார் எங்களுக்குத் தெரிவித்தார். மாளாபுரத்தில் எங்களுக்குப் பரம்பரைப் பந்துவாகிய கணபதி ஐயரென்பவருடைய குமாரி மதுராம்பிகை யென்ற பெண்ணை எனக்கு விவாகம் செய்துவைக்கத் தீர்மானித்தார்கள். கணபதி ஐயரும் அவருடைய தந்தையாராகிய ஐயாவையரென்பவரும் தமிழிற் பழக்கமுடையவர்கள். நான் தமிழ் படித்து வருகிறேனென்றறிந்து, “எப்படியாவது பையன் பிழைத்துக் கொள்வான்” என்று நம்பிப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார்கள். “அந்தப் பிள்ளை பார்க்க லக்ஷணமாயிருக்கிறான்; தலைநிறையக் குடுமி இருக்கிறது; நன்றாகப் பாடுகிறான்” என்று அந்த வீட்டிலிருந்த முதிய பெண்பாலார் திருப்தியடைந்தனர்.