பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

என் சரித்திரம்

பாடங் கேட்டவர். அவரைப் பற்றிக் கேள்வியுற்ற நான் ஊரிலிருந்த காலத்தை வீணாக்காமல் அவரிடம் சென்று பாடங் கேட்கலாமென்று எண்ணினேன்.

அப்படியே ஒருநாள் பாபநாசம் சென்று அவரைப் பார்த்துப் பாடஞ்சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவர் சம்மதித்தார். நன்னூல் காண்டிகையுரையை அவர்பால் கேட்கத் தொடங்கினேன். தினந்தோறும் காலையில் உத்தமதானபுரத்திலிருந்து பாபநாசம் செல்வேன்; பகல் முழுவதும் அங்கே தங்கியிருந்து அவருக்குள்ள ஓய்வு நேரங்களில் பாடங் கேட்டு வருவேன்.

அக்காலத்தில் அவர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றியும் தியாகராச செட்டியாரைப் பற்றியும் அடிக்கடி பாராட்டிப் பேசுவார்; “நன்னூல் பாடம் கேட்க வேண்டுமென்றால் தியாகராச செட்டியாரிடம் கேட்கவேண்டும். நன்னூலின் வரையறையை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார். ‘நடவாமடிசீ’ என்ற சூத்திரத்தின் உரை விசேஷத்தை அவரைப் போலச் சிக்கின்றிச் சொல்பவர் வேறு யாரும் இல்லை. அதனைப் பிள்ளையவர்களிடம் அவர் அறிந்துகொண்டார்” என்று அவர் சொல்லுவார். அவர் இவ்வாறு சொல்லச் சொல்ல எனக்கு நெடுங்காலமாக இருந்துவரும் ஆவல் பெருகி ஏக்கத்தை உண்டாக்கும். “கும்பகோணத்துக்குப் போய்ச் செட்டியாரிடம் பாடங் கேட்கலாமா? அது நமக்குக் கிடைக்குமா? கவர்ன்மெண்ட் காலேஜில் வேலைபார்க்கும் அவர் நம்மை ஒரு பொருட்படுத்திப் பாடஞ் சொல்லுவாரா!” என்று பல பலவிதமாக நினைந்து நினைந்து மறுகினேன்.

இராகவையரிடம் தொடர்ச்சியாக ஒரு வாரம் பாடங்கேட்டு வந்தேன். அவரோடு பழகும் ஒருவர் ஒரு நாள் என்னைப் பார்த்து, “தினந்தோறும் இவரிடம் பாடங்கேட்கிறீரே. இவர் ஏழை. இவருக்கு ஏதாவது திரவிய சகாயம் செய்யவேண்டாமோ?” என்றார். அவர் கூறியது உண்மைதான். ஆனால் நான் பொருளுதவி செய்யும் நிலையில் இல்லையே! என் தந்தையாரிடம் இந்த விஷயத்தைக் கூற அஞ்சினேன். நான் அவருக்குச் சிரமம் கொடுப்பது பிழைதான் என்பதை உணர்ந்து அன்று முதல் தினந்தோறும் அவரிடம் சென்று வருவதை நிறுத்திக்கொண்டேன். இடையிடையே சென்று சில விஷயங்களை மட்டும் கேட்டு வந்தேன்.

பிற்காலத்தில் இராகவையர் மதுரைக் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து அப்பால் சந்நியாசம் பெற்று வாழ்ந்து வந்தார்.