பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏக்கமும் நம்பிக்கையும்

133


‘இங்கிலீஷ் படிக்கச் சொல்லுங்கள்’

ஒருநாள் நானும் என் தந்தையாரும் கும்பகோணத்திற்கு ஒரு வேலையாகப் போயிருந்தோம். அங்கே வக்கீலாக இருந்த வேங்கட ராவ் என்பவர் எந்தையாருக்கு நண்பராதலின் அவர் வீட்டிற்குச் சென்றோம். தந்தையார் அவரோடு பேசுகையில் என்னைப் பற்றி அவர் விசாரித்தார். “இவன் தமிழ் படிக்கிறான்; சங்கீத அப்பியாசமும் செய்து வருகிறான். யாரிடமாவது இருந்து தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறான். இங்குள்ள தியாகராச செட்டியார் மிகச்சிறந்த வித்துவானென்று கேள்விப்படுகிறோம். அவரிடம் படிக்க வேண்டுமென்று இவன் விரும்புகிறான்” என்று தந்தையார் சொல்லிவிட்டு நான் இயற்றிய செய்யுட்கள் சிலவற்றைச் சொல்லிக்காட்டச் செய்தார்.

அவற்றைக் கேட்ட வேங்கடராவ், “நன்றாக இருக்கின்றன. ஆனால் இக்காலத்தில் இவற்றால் என்ன பிரயோஜனம்? எதற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? இதை விட்டுவிட்டு இங்கிலீஷ் படிக்கச் சொல்லுங்கள். நான் உதவி செய்கிறேன்; என் அன்பர்களையும் செய்யச் சொல்லுகிறேன். இன்னும் சில வருஷங்களில் இவன் முன்னுக்கு வந்துவிடுவான்” என்றார்.

எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை; அவர் என்னிடமுள்ள அன்பினால் அவ்வாறு சொல்லுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க என் மனம் இடம் தரவில்லை. அவர்பால் எனக்குக் கோபந்தான் உண்டாயிற்று. “தியாகராச செட்டியாரிடம் படிக்க வழிகேட்டால் இவர் இங்கிலீஷ் படிக்கவல்லவா உபதேசம் செய்கிறார்? எனக்கு இங்கிலீஷு ம் வேண்டாம்; அதனால் வரும் உத்தியோகமும் வேண்டாம்” என்று நான் சிந்தனை செய்தேன்.

என் தந்தையார், “இங்கிலீஷ் படிக்க முன்பே இவன் முயன்றதுண்டு; தெலுங்கும் படித்தான். ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. தமிழ்ப் படிப்பிலேதான் இவனுக்கு ஆசையும் தீவிரமும் இருக்கின்றன. வேறு வழியில் இவன் புத்தியை மாற்றுவது சாத்தியமாகத் தோற்றவில்லை” என்று கூறி விடைபெற்று என்னுடன் உத்தமதானபுரம் வந்துவிட்டார்.

‘உடம்பு வளைந்து வேலை செய்வது’

உத்தமதானபுரத்தில் எங்கள் நிலங்களை என் சிறிய தந்தையார் கவனித்து வந்தார். நான் அவ்வூரில் தங்கியிருந்த ஆறுமாத காலங்களில் அவருடன் வயற்காடுகளுக்குச் செல்வேன். புன்செய்களில் பயிரிட்டிருக்கும் செடி, கொடிகளைப் பாதுகாப்பதில்