பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காரிகைப் பாடம்

141

அடிக்கடி பாராட்டிச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சிவபிரகாச சுவாமிகள் பழகிய இடங்களையும், அவர் நீராடும்பொருட்டு அமைக்கப்பெற்ற நடை வாவிகளையும் நான் பார்த்திருக்கிறேன்.

பல தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் அச்சுப் புஸ்தகங்களையும் விருத்தாசல ரெட்டியார் தொகுத்து வைத்திருந்தார். எழுத அநேக ஏட்டுச் சுவடிகளை ஸித்தமாக வைத்திருப்பார். தம்மிடம் இல்லாத அரிய தமிழ் நூல்கள் கிடைத்தால் அவற்றில் எழுதிக்கொள்வார். ஏட்டுச் சுவடியில் விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார். எனக்காகச் சில தமிழ் நூல்களை ஏட்டுச் சுவடியில் எழுதித் தந்திருக்கிறார். சில சமயங்களில் நானும் அவரும் ஒரே சமயத்தில் ஒரு நூலைப் பிரித்துக்கொண்டு தனித்தனியே பிரதி பண்ணுவோம்.

படித்தலும் பாடம் சொல்லுதலும் வந்தவர்களிடம் சம்பாஷணை செய்தலுமின்றி வேறு ஒரு காரியத்திலும் அவர் புத்தியைச் செலுத்துவதில்லை. மிகுதியான பூஸ்திதி உள்ளவர் அவர். அவற்றை அவருடைய பிள்ளைகளும் காரியஸ்தருமே கவனித்து வந்தனர். இவ்வாறு அவர் இருத்தலில் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் மிக்க வருத்தம் இருந்தது. அதனை ரெட்டியார் உணர்ந்தும் சிறிதும் கவலைகொள்ளவில்லை.

நல்லப்ப ரெட்டியார்

நான் விருத்தாசல ரெட்டியாரிடம் பாடங்கேட்ட காலத்தில் அவருக்குச் சற்றேறக் குறைய ஐம்பத்தைந்து பிராயத்திற்கு மேல் இருக்கும். அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். மூத்தவராகிய நல்லப்ப ரெட்டியாருக்கு ஸ்ரீதன வருவாய் மிகுதியாக இருந்தது. பெண்மணிகளுக்கு அதிக ஸ்ரீதனம் வழங்குவது அந்த ஜாதியினருடைய வழக்கம். அதனால் பெண்மணிகள் சுதந்திரமும் விவேகமும் கணவர்களிடத்தில் மரியாதையும் உடையவர்களாக இருப்பார்கள்.

நல்லப்ப ரெட்டியார் நல்ல தியாகி. தமிழிலும் பயிற்சியுள்ளவர். உத்தமமான குணமுடையவர். என் தந்தையாரிடம் பேரன்பு பூண்டிருந்தார். அவர் தனியே எங்களுக்குச் செய்துவந்த உதவிகள் பல.

யாப்பருங்கலக் காரிகையைப் பாடங்கேட்டது

நல்லவேளையில் நான் காரிகை படிக்கத் தொடங்கினேன். யாப்பிலக்கணத்தைப் பற்றிச் சிறிதும் அறியாதநிலையில்