பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

என் சரித்திரம்

இருந்தேன் நான். எனக்கு அதைக் கற்பிப்பது சிரமமான காரியந்தான். ஆனாலும் ரெட்டியார் தெளிவாக எனக்குக் கற்பித்தார். அவருடைய ஞானமும் என்னுடைய ஆவலும் சேர்ந்து அந்தத் தெளிவுக்குக் காரணமாயின.

நான் பாடங்கேட்கத் தொடங்கியது சுக்கில வருஷம் மார்கழி (1869) மாதத்திலாகும். விடியற்காலையில் நான்கு மணிக்கே அவர் என்னை எழுப்பிவிடுவார். திருவாசகத்தில் திருவெம்பாவையைப் படிக்கச் செய்வார். முதல்நாள் நடந்த பாடத்தை மறுபடியும் சொல்லிக் கேள்விகள் கேட்டு என் மனத்தில் பதியச் செய்வார். அக்கேள்விகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. பாடம் கேட்பவர் எவ்வளவு தூரம் கிரகித்துக்கொண்டார் என்பது தெரியாமலே தொடர்ச்சியாகப் பாடம் சொல்வதில் பயன் ஒன்றுமில்லை என்பதை அவர் அறிவார். கேட்ட பாடத்தைச் சிந்திக்கச் செய்து அடிக்கடி கேள்வி கேட்பதனால் கற்பித்த பாடம் உறுதிப்படும்.

யாப்பருங்கலக் காரிகையும் உரையும் மேற்கோட் செய்யுட்களும் என் உள்ளத்தே பதிந்தன. மேற்கோட் செய்யுளின் அர்த்தத்தையும் எந்த இலக்கணத்திற்கு உதாரணமாக அது காட்டப்படுகிறதோ அந்த இலக்கணம் அமைந்திருப்பதையும் ரெட்டியார் எடுத்துரைப்பார். அந்த இலக்கணத்தை அமைத்துப் புதிய செய்யுட்கள் எழுதும்படி சொல்லுவார். நான் எழுதியதைப் பார்த்து இன்ன இன்ன பிழைகள் இருக்கின்றன என்று விளக்குவார். ஒருவகைச் செய்யுளுக்குரிய இலக்கணத்தை அவ்வகைச் செய்யுளாலேயே உரைக்கும் இலக்கண நூல் தெலுங்கிலும் வட மொழியிலும் உள்ளனவாம். ரெட்டியாருக்குத் தெலுங்கு தாய்மொழி. அதிலும் அவருக்குப் பயிற்சி உண்டு. தெலுங்கு நூலைப் பற்றி என்னிடம் சொல்லி “அவ்வாறே நீரும் செய்து பழகும்” என்று உரைத்து அவ்வழியையும் கற்பித்தார். அப்படியே நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை நேரிசை வெண்பாவிலேயே அமைத்தேன்; ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஆசிரியப்பாவாலேயே கூறினேன். மிகவும் சிரமப்பட்டு இவ்வாறு பாடிக் காட்டுவேன். அச்செய்யுட்களில் உள்ள குணத்தைக் கண்டு முதலில் எனக்கு உத்ஸாகம் ஊட்டுவார்; பிறகு பிழை இருந்தால் அதனையும் எடுத்துக்காட்டுவார்.

காரிகையின் முதற்செய்யுளின் உரையில் உரையாசிரியராகிய குணசாகரர் வேறு மொழிகளிலுள்ள நூல்களை உவமையாக எடுத்துச் சொல்லுகிறார். அந்நூல்களைப் பற்றிய வரலாறுகள்