பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

என் சரித்திரம்

கூறித் தம்மிடமிருந்த அப்புஸ்தகத்தை என்னிடம் கொடுத்தார். அது துந்துபி௵ (1862) சந்திரசேகர கவிராஜ பண்டிதரென்பவரால் முதன் முறையாகப் பதிப்பிக்கப்பெற்றது. அப்பொழுது அதன் விலை ரூபா ஐந்து.

அதைப் பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு பெரிய புதையல் கிடைத்துவிட்டதுபோல இருந்தது. பலவகையான கருத்துக்களும் பலவகையான சாதுரியங்களும் அமைந்த தனிப்பாடல்கள் என் மனத்தைக் கவர்ந்தன. காளமேகப்புலவர் சமயத்துக்கேற்றபடி சாதுரியமாகப் பாடிய பாடல்களைப் படித்துப் படித்து உவப்பேன்; அவர் பாடிய சிலேடைகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்வேன்; பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் செய்யுட்களிலுள்ள பக்தியையும் எளிய நடையையும் கண்டு ஈடுபடுவேன்; ஔவையார் முதலியவர்களுடைய பாடல்களின் போக்கிலே என் மனம் லயித்துவிடும். பலவகையான சுவைகள் உள்ள அப்பாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரத்தினமாகவே தோன்றியது; ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அவற்றையே படித்துக் காலம் கழிப்பேன். பிறரிடம் சொல்லிச் சொல்லிப் பாராட்டுவேன்; மிக விரைவில் பல பாடல்கள் மனனமாயின; எனது தமிழன்பு அப்பாடல்களால் எவ்வளவோ உயர்ந்துவிட்டது.

ரெட்டியார் எனக்கு யாப்பருங்கலக்காரிகை அச்சுப் பிரதியையும் வேறு சில புஸ்தகங்களையும் பின்பு அளித்தார். அச்சுப் புஸ்தகங்கள் அருமையாக வழங்கிய அக்காலத்தில் அப்புஸ்தகங்கள் எனக்குப் பெருந்தனமாக இருந்தன.

படித்த நூல்கள்

விருத்தாசல ரெட்டியாரிடம் பல தமிழ் நூல்கள் இருந்தன. அவற்றிற் பல ஏட்டுச் சுவடிகள்; சில அச்சுப் புஸ்தகங்கள். ஏட்டுப் பிரதிகளிற் பல அவர் தம் கையாலேயே எழுதியவை. செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதத்தில் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. தம் கையாலேயே அந்நூல் முழுவதையும் ஏட்டில் எழுதி வைத்திருந்தார். ஓய்ந்த நேரங்களில் நான் அப்புஸ்தகங்களை எடுத்துப் பார்ப்பேன்; படிப்பேன். அவற்றிலுள்ள விஷயங்களை ரெட்டியாரிடம் கேட்பேன். அவர் சொல்லுவார். இத்தகைய பழக்கத்தால் தமிழ்க்கடலின் ஆழமும் பரப்பும் பல நூற்பகுதிகளும் சில வித்துவான்களுடைய சரித்திரங்களும் விளங்கின. தண்டியலங்காரம், திருக்குறள், திருக்கோவையார் என்னும் நூல்களை நானே படித்தேன். கம்பராமாயணத்திலும் பல பகுதிகளைப் படித்து உணர்ந்தேன்.