பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாட்டியல்கள்

காரிகைக்குப் பிறகு ரெட்டியார் எனக்குப் பொருத்த இலக்கணங்களையும் பிரபந்த இலக்கணங்களையும் கற்பித்தார். அவற்றை அவர் நன்றாக ஆராய்ந்து வரையறை செய்து வைத்திருந்தார். அவருடைய வீட்டுத் திண்ணைச் சுவர்களில் பல இடங்களில் இரட்டை நாகபந்தம், அஷ்ட நாகபந்தம் முதலிய சித்திரகவிகள் எழுதப்பெற்றிருக்கும். நான் முன்பே சில பாட்டியல் நூல்களைப் படித்திருந்தமையால் அவர் கற்பித்தபோது எனக்கு அவை தெளிவாக விளங்கின. ரெட்டியாருடைய விருப்பத்தின்படி ஒவ்வொரு பாட்டியலிலும் ஒரே விஷய சம்பந்தமாகக் காணப்படும் இலக்கணங்களைத் தொகுத்து வரிசைப்படுத்தி ஏட்டிற் பிரதி செய்துகொண்டேன். மங்கலப் பொருத்தம் என்பதன் இலக்கணத்தைப் பற்றி எல்லாப் பாட்டியல்களிலுமுள்ளவற்றை ஒருங்கே எழுதினேன். இம்முறையில் மற்றவற்றையும் எழுதினேன். இவ்வாறு தொகுத்து எழுதிய அச்சுவடி விஷய வரிசையால் அமைந்த பாட்டியற் கொத்தாக இருந்தது. அப்பிரதி பிற்காலத்தில் என்னிடமிருந்து நழுவிவிட்டது. அவரிடம் தத்தாத்திரேயப் பாட்டியல் என்னும் பிரபந்த இலக்கண நூல் இருந்தது அதனையும் படித்தேன். பிரதி செய்துகொள்ளவில்லை. இப்போது அந்நூல் தமிழ்நாட்டில் அகப்படவில்லை. சித்திரகவிகளின் இலக்கணத்தையும் அவற்றை இயற்றும் பழக்கத்தையும் ரெட்டியார் உதவியால் அறிந்துகொண்டேன்.

பெருமாளையர்

ரெட்டியாருடைய நண்பராகிய பெருமாளையர் என்னும் காணியாளப் பிராமணர் ஒருவர் பெரும்பாலும் ரெட்டியாருடனே இருப்பார். அவருக்கும் யாப்பிலக்கணத்திலும் பொருத்த இலக்கணங்களிலும் சித்திரகவிகளிலும் நல்ல பழக்கம் இருந்தது. நன்றாக அவர் சித்திரம் எழுதுவார். ரத பந்தம், நாகபந்தம், கமல பந்தம், சக்கர பந்தங்கள் முதலியவற்றை அவர் போட்டுத் தருவார். நான் அவற்றுள் செய்யுளை அடைப்பேன். நானும் அச்சித்திரங்களை வரைவேன்.

நான் ஒருநாள் அறுசீரடி ஆசிரிய விருத்தம் ஒன்று எழுதிப் பெருமாளையரிடம் காட்டினேன். அச்செய்யுளில் நான்கு அடிகள் இருந்தன; ஆறு சீர்கள் இருந்தன; எதுகை மோனை எல்லாம் இருந்தன. ஆனால் ஓசை சரியாக இல்லை. பெருமாளையர் அதைப் பார்த்துச் சிரித்தார். “ஏன்? இதில் என்ன பிழை?” என்று கேட்டேன் “நீரே படித்துப் பாரும்; ஓசை சரியாக இருக்கிறதா என்று கவனியும்” என்றார். நான் சிலமுறை

என்—10