பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாயூரப் பிரயாணம்

153

வாக்கு மிகவும் கம்பீரமாகச் செல்லுகிறது. அத்தகைய பெரியவரிடத்தில் பாடங் கேட்பதற்கு மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவரிடம் மனம்கோணாதபடி நடந்துகொண்டு கற்றுக்கொள். நீ எப்போது அவரிடம் போவதாக நிச்சயித்தாயோ அப்போதே உன் கஷ்டமெல்லாம் தீர்ந்ததென்றே சொல்வேன். நன்றாகப் படித்துப் பெரிய வித்துவானாக விளங்க வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

“எல்லாம் நீங்கள் ஊட்டின தமிழ்ச் சுவையினால் உண்டான பயனே!” என்று பணிவாக நான் விடை கூறினேன்.

சில அன்பர்கள் விரும்பியபடி நாங்கள் பத்து நாட்கள் அரியிலூரில் தங்கியிருந்தோம். சடகோபையங்காரிடம் திருவரங்கத்தந்தாதியில் பாடங் கேளாமல் பாக்கியிருந்த செய்யுட்களை அக்காலத்தில் கேட்டுப் பொருள் தெரிந்துகொண்டதன்றி முன்புள்ள செய்யுட்களில் உள்ள சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்தேன்.

கீழைப்பழுவூர்

அரியிலூருக்கு அருகில் உள்ள கீழைப்பழுவூர் என்னும் ஸ்தலத்திலிருந்த செல்வராகிய சபாபதி பிள்ளை யென்பவர் என் தந்தையாரைச் சந்தித்துத் தம் ஊருக்கு வந்து சில தினங்கள் இருக்கவேண்டுமென்று கூறவே, அவர் விருப்பத்தின்படியே அங்கே சென்றோம். ஒரு வாரம் அவ்வூரில் தங்கியிருந்தோம். அவர், தஞ்சையில் வக்கீலாக இருந்த ராவ்பகதூர் கே. எஸ். சீனிவாஸ பிள்ளையின் தமையனார். அவர்களுடைய தந்தையாராகிய சிவசிதம்பரம் பிள்ளைக்கும் என் தந்தையாருக்கும் இளமை முதற் பழக்கம் உண்டு. அவர் எங்கள் குடும்பத்திற்கு அதிக உதவி செய்தவர்.

சபாபதி பிள்ளை தமிழ்ப் பயிற்சியுடையவர். அவர் தஞ்சைவாணன் கோவை மூலமுள்ள புஸ்தகத்தையும் வேறு சில புஸ்தகங்களையும் எனக்குக் கொடுத்து உதவினார். செங்கணத்தில் திருக்கோவையாரைப் படித்த காலத்தில் ரெட்டியார் மூலமாக அகப்பொருளிலக்கணத்தை ஒருவகையாகத் தெரிந்துகொண்டிருந்தேன். அதனால் தஞ்சைவாணன் கோவையிலுள்ள பொருளமைதி எனக்கு நன்கு விளங்கியது. அதன் செய்யுள் நடைசிக்கலின்றித் தெளிவாக இருத்தலின் எனக்கு எளிதிற் பொருள் புலப்பட்டது. சில நாட்களில் அதைப் படித்து முடித்தேன்.