பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடம் கேட்க தொடங்கியது

167

கனவும் பயனும்

என் தந்தையாரும் அன்று இரவு என்னைப் போலவே அமைதியாகத் தூங்கவில்லை. அதற்குக் காரணம் என்னைத் தனியே விட்டுச்செல்ல வேண்டுமே என்ற கவலைதான். அதே ஞாபகத்தோடு அவர் படுத்திருந்தார்.

படுக்கையிலிருந்து காலையில் எழுந்தவுடன், “சாமா” என்று என்னை அழைத்தார். “ராத்திரி நான் ஒரு சொப்பனம் கண்டேன். தம்பதிகளாகிய ஒரு கிழவரும் கிழவியும் வந்து என்னிடம் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, ‘உன் பிள்ளைக்குக் கொடு; அவனைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அது முதல் எனக்கு மிக்க தைரியம் உண்டாகிவிட்டது. உனக்கு க்ஷேமம் உண்டாகுமென்றே நம்புகிறேன். நீ கவலைப்படாமல் இரு” என்று சொன்னார். எனக்கோ அச்சமயத்தில் ஒரு கவலையும் இல்லை. ஆனாலும் அவர் என் கவலையைப் போக்குபவரைப் போலத் தம்முடைய கவலைக்கு ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டார்.

பொழுது நன்றாக விடிந்தது. காலை நியமங்களை முடித்துக்கொண்டு நாங்கள் இருவரும் பிள்ளையவர்கள் வீட்டுக்குச் சென்றோம். முதற்கட்டில் சைவச்செல்வர்கள் சிலருடன் அமர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் புன்னகையோடு, “வாருங்கள்; உட்காருங்கள்” என்று சொன்னார். முதல் நாள் அவருடைய வார்த்தையில் அயலாரை உபசரிப்பதுபோன்ற தொனி இருந்தது. இரண்டாம் நாளோ அவர் வாய் என் தந்தையாரை வரவேற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் பார்வை என்மேல்தான் விழுந்தது. அவர் குரலில் ஒரு பற்றோடு கூடிய அன்பு தொனித்தது. முதல் நாள் எங்களை அயலாராக எண்ணிய அவர் அன்றைத் தினம் தம்மைச் சேர்ந்தவர்களாகவே எண்ணினார் போலும்!

“இராத்திரி ஆகாரம் சௌகரியமாக இருந்ததா? நீங்கள் தங்கியுள்ள ஜாகை வசதியாக இருக்கிறதா?” என்று வினவினார்.

“எல்லாம் சௌகரியமாகவே இருக்கின்றன. நேற்று ராத்திரி கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம். இவனுடைய க்ஷேமத்தைக் குறித்து ஸந்நிதியில் பிரார்த்தனை செய்தேன். ராத்திரி தூக்கத்தில் நான் ஒரு சொப்பனம் கண்டேன்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் “என்ன சொப்பனம் அது?” என்று கேட்கவே தந்தையார் அதை எடுத்துரைத்தார்.