பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

என் சரித்திரம்

“இது நல்ல சகுனம். ஸ்ரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் கிழவர், கிழவி என்று சொல்வது இந்த ஸ்தலத்தில் வழக்கம். உங்கள் கனவில் தோன்றியவர்கள் அவ்விருவருமே. நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; இவர் க்ஷேமமாக இருப்பார்” என்று அந்தக் கனவுக்குப் பொருள் கூறினார் அப்புலவர் கோமான்.

என் தந்தையார் தம் கனவில் ஸ்ரீ மாயூரநாதரே எழுந்தருளியதாக நம்பித் திருப்தி அடைந்தார்; நானோ பிள்ளையவர்கள் நேரே இருந்து. “நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்” என்று கூறியதுபற்றித் திருப்தியுற்றேன்.

பேச்சினிடையே அனுபவ வார்த்தைகள்

அப்பால் அங்கே வந்திருந்த கனவான் ஒருவர் ஆறுமுக நாவலரைப் பற்றிய சில செய்திகளைச் சொன்னார். நாவலர் சிதம்பரத்தைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றதும் அவர் வரவை அறிந்து யாழ்ப்பாணத்து வித்துவான்களும் பிரபுக்களும் கடற்றுறையில் அவரை எதிர்கொண்டழைத்துச் சென்று உபசரித்ததும் பிறவுமாகிய சமாசாரங்களை அவர் சொன்னார். மற்றொருவர் வடலூரில் இராமலிங்க வள்ளலார் இருந்ததையும் அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் விரிவாகக் கூறினார். பிறகு பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் அரியிலூர் முதலிய ஊர்களைப்பற்றி விசாரித்தனர். அங்கே உள்ளவர்கள் வித்துவான்களிடம் காட்டும் ஆதரவையும் பிறருக்குத் தங்களால் இயன்ற உபகாரம் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஏழைகளுக்கும் இருப்பதையும் தகப்பனார் எடுத்துச் சொன்னார்.

“காட்டுப் பிரதேசங்களென்று நாம் சொல்லுகிறோம். அங்கேதான் ஜீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன. நாகரிகம் அதிகமாக ஆகச் சுயநலமும் அதிகமாகின்றது. நாகரிகமுள்ள இடங்களில் உபகார சிந்தையுள்ளவர்களை அருமையாகத்தான் பார்க்கிறோம்” என்று பிள்ளையவர்கள் கூறினர்.

அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவரது அனுபவத்திலிருந்து எழுந்தவை என்று பிற்காலத்தில் நான் அறிந்தேன்.

பரீட்சை

பிறகு நாங்கள் விடைபெற்றுச் சென்று பகல் உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர் திருநாகைப் காரோணப் புராணத்தை வருவித்து