பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்

175

பொருட்டு அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடுவார்கள். அதற்காகச் சங்கீதம் கற்றுக்கொண்டார்கள். இவர்களெல்லாம் பாரதியாரிடமும் வந்து செல்வார்கள்.

உணவுக்கு ஏற்பாடு

என் தந்தையார் மாயூரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அக்காலத்தில் அந்நகரில் தமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சென்று என்னைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர் அங்கே இருந்த வரையில் சிறிய தகப்பனார் வேட்டகத்தில் ஆகாரம் செய்து வந்தேன். என் சிறிய தாயாரும் அப்போது அங்கே வந்திருந்தார். எப்போதும் அந்த வீட்டில் உணவுகொள்வது உசிதமாக இராது என்று எண்ணி என் தந்தையார் வேறு ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

அக்காலத்தில் மகாதானத் தெருவில் ஒரு வீட்டில் அறுபது பிராயம் சென்ற விதவை ஒருத்தி அவ்வூர் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கும் பள்ளிக்கூட மாணவர் சிலருக்கும் சமைத்துப்போட்டு அதனால் கிடைக்கும் வருவாயைக்கொண்டு ஜீவனம் செய்து வந்தாள். பள்ளிக்கூட மாணவர்களுக்குக் காலையில் பழையதும் பகலிலும் இரவிலும் ஆரோக்கியமான உணவும் அளிக்கப்படும். இதற்காக அந்த அம்மாள் மாதம் ஐந்து ரூபாய்தான் பெற்று வந்தாள். என் சிறிய தாயாராகிய லக்ஷ்மி அம்மாள் அக்கிழவியிடம் சொல்லி எனக்கு ஜாக்கிரதையாக உணவு அளிக்கும்படி ஏற்பாடு செய்தார்.

என் தந்தையார் எனக்கு வேண்டிய பணத்தை என்னிடம் அளித்தார். பிறகு அவர் மாயூரத்தைவிட்டுச் செல்ல எண்ணித் தம் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். புறப்படும் தினத்துக்கு முதல் நாள் இரவு முழுவதும் எனக்குப் பலவிதமான போதனைகளைச் செய்தார். நான் இன்ன இன்னபடி நடந்துவர வேண்டுமென்றும், உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும், அடிக்கடி எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டுமென்றும் பல முறை சொன்னார்.

விடை பெற்றது

புறப்படும் தினத்தன்று காலையில் அவர் என்னுடன் பிள்ளையவர்களிடம் வந்தார்.

“நான் இன்று ஊருக்குப் போகலாமென்று எண்ணியிருக்கிறேன். விடைதரவேண்டும்” என்று தகப்பனார் சொன்னார்.