பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் தகப்பனார் ஊருக்குப் புறப்பட்டார். நான் சிறிது தூரம் உடன்சென்று வழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் சென்ற பிறகுதான் எனக்கு ஏதோ ஒரு புதிய துன்பம் வந்தது போன்ற தோற்றம் உண்டாயிற்று. நான் முன்பு அறியாத ஒன்றை, தாய் தந்தையரைப் பிரியும் துன்பத்தை, அப்போது உணர்ந்தேன்.

மனோதைரியமும் கஷ்டத்தைச் சகிக்கும் ஆற்றலுமுடைய என் தந்தையாரே என்னைப் பிரிந்திருக்க வருந்தினாரென்றால், என் அருமைத் தாயார் எவ்வளவு துடித்து வருந்துவார் என்பதை நினைத்தபோது என் உள்ளம் உருகியது. குன்னத்தில் இருந்த காலத்தில் நான்கு நாள் பிரிந்திருந்து திரும்பி வந்தபோது என்னை அவர் தழுவிக்கொண்டு புலம்பிய காட்சி என் அகத்தே தோற்றியது.

நான் தந்தையாரை அனுப்பிவிட்டு வந்தவுடன் பிள்ளையவர்கள் எனக்குப் பலவிதமான ஆறுதல்களைக் கூறினார்; என்னுடைய துன்பத்தை மாற்றுவதற்குரிய பல வார்த்தைகள் சொன்னார்.

“சில நாட்களில் திருவாவடுதுறைக்குப் போகும்படி நேரும். அங்கே ஸந்நிதானம் உம்மைப் பார்த்து ஸந்தோஷமடையும். நீர் இசைப்பயிற்சி உடையவரென்று தெரிந்தால் உம்மிடம் தனியான அன்பு வைக்கும்” என்று சொல்லித் திருவாவடுதுறை ஆதீன விஷயங்களையும் வேறு சுவையுள்ள சமாசாரங்களையும் கூறினார். அவர் வார்த்தைகள் ஒருவாறு என் துன்பத்தை மறக்கச் செய்தன.

நாளடைவில் தமிழின்பத்தில் அத்துன்பம் அடியோடே மறைந்துவிட்டதென்றே சொல்லலாம்.

அத்தியாயம்—30

தளிரால் கிடைத்த தயை


சவேரிநாத பிள்ளையிடம் நைடதம் பாடங்கேட்டு வரும்போது இடையிடையே நான் அவரைக் கேள்விகேட்பதை என் ஆசிரியர் சில சமயம் கவனிப்பதுண்டு. என் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் அவர் சும்மா இருக்கும்போது பிள்ளையவர்கள், “என்ன சவேரிநாது, இந்த விஷயங்களை எல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர் தாமே படித்து விஷயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறாரே” என்று சொல்லுவார். அப்போது

என்—12