பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தார்கள். யாருக்கேனும் பணம் கொடுக்கும்போது ஒவ்வொரு காசையும் தனித்தனியே எடுத்துத் தட்டிக்காட்டிக் கையிலே கொடுப்பார்கள். பிள்ளையவர்களோ நிதிக்குவியல்களை வாரி வாரி வழங்குபவரைப்போல இருந்தார். அங்கே காசு இல்லை. எல்லாம் தங்க நாணயமே. அதுவும் குவியல் குவியலாக வாரி வாரி விடவேண்டியதுதான். வாரிக்கொள்பவர்களுடைய அதிர்ஷ்டம்போல லாபம் கிடைக்கும். எவ்வளவுக்கெவ்வளவு ஆசை அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வாரிச் சேமித்துக்கொள்ளலாம். பஞ்சமென்பது அங்கே இல்லை.

பசிக்கு ஏற்ற உணவு

எனக்கிருந்த தமிழ்ப்பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன்; என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு; சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். அமிர்த கவிராயரிடம் திருவரங்கத்தந்தாதியில் ஒரு செய்யுளைக் கேட்பதற்குள் அவர் எவ்வளவோ பாடுபடுத்திவிட்டாரே! அதற்குமேல் சொல்லுவதற்கு மனம் வராமல் அவர் ஓடிவிட்டாரே! அந்த அனுபவத்தோடு இங்கே பெற்ற இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். “அடேயப்பா! என்ன வித்தியாசம்! தெரியாமலா அவ்வளவு பேரும் ‘பிள்ளையவர்களிடம் போனால்தான் உன் குறை தீரும்’ என்று சொன்னார்கள்?” என்று எண்ணினேன். “இனி நமக்குத் தமிழ்ப்பஞ்சம் இல்லை” என்ற முடிவிற்கு வந்தேன்.

அத்தியாயம்—31

என்ன புண்ணியம் செய்தேனோ!


திருக்குடந்தைத்திரிபந்தாதியை இரண்டே தினங்களில் நான் பாடங்கேட்டு முடித்தேன். அப்போது என் ஆசிரியர் ஏடுவாரிச் சுவடி சேர்த்துக் கொடுத்தார்; ஒரு வாரெழுத்தாணியையும் அளித்து அந்நூலைப் பிரதி செய்துகொள்ளும்படி சொன்னார்; அச்சுப் புஸ்தகங்கள் மிக அருமையாக அகப்படும் அக்காலத்தில் நான் பாடங்கேட்ட புஸ்தகங்களிற் பெரும்பாலானவற்றை ஏட்டிலே எழுதிப் படித்தேன். இப்பழக்கத்தால் ஏட்டில் விரைவாகவும் தெளிவாகவும் எழுதும் வழக்கம் எனக்கு உண்டாயிற்று.