பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

என் சரித்திரம்

நான் பாடங்கேட்டபோது சவேரிநாத பிள்ளையும், கனகசபை ஐயரென்னும் வீரசைவரும், அவர் தம்பியாகிய சிவப்பிரகாச ஐயரும் சேர்ந்து பாடங்கேட்டனர். கனகசபை ஐயர் கூறை நாட்டில் ஒரு பள்ளிக்கூடம் வைத்திருந்தார்.

அந்தாதிகள்

குடந்தைத் திரிபந்தாதியைப் படித்தபோது அதை இயற்றியவர் பிள்ளையவர்களே என்று அறிந்து, “ஒரு நூலை இயற்றிய ஆசிரியரிடமே அதனைப் பாடங்கேட்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!” என்று எண்ணி எண்ணி இன்புற்றேன். அதைப் போன்ற பல பிரபந்தங்களையும் பல புராணங்களையும் அவர் இயற்றியுள்ளா ரென்பதைச் சவேரிநாத பிள்ளை சொல்லக் கேட்டிருந்தேன். “ஆதலால் இனி இவர்கள் இயற்றிய நூல்கள் எல்லாவற்றையும் இவர்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ளலாம்” என்ற நினைவிலே நான் ஒரு தனி மகிழ்ச்சியை அடைந்தேன்.

குடந்தைத்திரிபந்தாதி முடிந்தவுடன், பழமலைத்திரிபந்தாதி தொடங்கப்பட்டது. அதனை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிவப்பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களிலே இருந்து அவருடைய புகழைக் கேட்டுக் கேட்டு அவரைப் பற்றிச் சிறந்த மதிப்பு வைத்திருந்த எனக்கு அவர் நூலைப் படிக்கத் தொடங்கியபோது பழைய காட்சிகளெல்லாம் நினைவுக்கு வந்தன. சிவப்பிரகாச சுவாமிகளால் நீராடப் பெற்றனவாகச் சொல்லப்படும் நடை வாவிகளை நினைத்தேன். அவருடைய பரம்பரையினரை நினைத்தேன். ஒரு கவிஞர் இயற்றிய நூலை மற்றொரு கவிஞர் பாடஞ்சொல்ல, அதைக் கேட்கப் பெற்ற என் பாக்கியத்தை நினைத்தேன்.

“சிவப்பிரகாச சுவாமிகள் சிறந்த கவி; கற்பனா சாமர்த்தியம் உடையவர். கவிதா சார்வ பௌமர் என்று அவரைப் பெரியோர்கள் சொல்லுவார்கள். அவர் இயற்றியுள்ள வெங்கைக் கோவையை மந்திரிக் கோவையென்றும் திருச்சிற்றம்பலக் கோவையாரை ராஜாக்கோவை என்றும் சொல்வது வழக்கம். சோணசைல மாலை என்ற பிரபந்தம் மிக்க சுவையுடையது. ஒவ்வொரு செய்யுளிலும் ஏதாவது கற்பனை இருக்கும். ஒரு காலத்தில் சுவாமிகள் திருவண்ணாமலையில் கிரிப் பிரதக்ஷிணம் செய்தபோது ஒரு தடவை வலம் வருவதற்குள் அந்த நூலிலுள்ள நூறு செய்யுட்களையும் செய்து முடித்தார்களாம்” என்று பிள்ளையவர்கள் கூறிவிட்டுப் பாடஞ்சொல்லத் தொடங்கினார். ஒரு கவிஞர் மற்றொரு