பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

என் சரித்திரம்

செய்வதற்கும் அனுகூலமாக இருக்குமென்று கருதி அந்தாதிகளை மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லி வந்தார்கள். அம்முறைப்படியே நானும் சவேரிநாத பிள்ளையும் பிறரும் பாடங் கேட்போம்.

அந்தாதிகள் ஆன பிறகு பிள்ளைத்தமிழ் வரிசை தொடங்கப் பெற்றது. எனக்குக் கொண்டாட்டந்தான். கால் நூலும், அரை நூலும், ஒரு செய்யுளுமாகப் படித்த எனக்கு வரிசை வரிசையாகப் பிரபந்தத் தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அனாயாசமாகக் கிடைத்தன. சோர்வில்லாமற் பாடங் கேட்டு வந்தேன். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் என்பவற்றைக் கேட்டேன். திரிபந்தாதியா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு யமக அந்தாதியா? அதிலும் இரண்டு, மூன்று. பிள்ளைத் தமிழா? அதிலும் ஐந்துக்குக் குறைவில்லை. பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றிய அஷ்டப்பிரபந்தங்களில் ஐந்தாறு பிரபந்தங்கள் பாடங் கேட்டேன். அசுவதாட்டியில் நான் பாடங் கேட்டு வந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை. இப்படி நான் பாடங் கேட்கும் காலம் ஒன்று வருமென்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. விருத்தாசல ரெட்டியார், “நாங்களெல்லாம் மேட்டுநிலத்துக் கிணற்றில் ஊறும் ஊற்றுக்கள். அவர் காவேரிப் பிரவாகம்” என்று சொன்னது எவ்வளவு உண்மையானது? காவேரிப் பிரவாகமா? கங்காப் பிரவாகமென்று சொல்லலாம்; அதுகூடப் போதாது. “கடல் மடை திறந்தது போன்றது” என்று சொன்னாலும் தகும். ஒவ்வொரு பிரபந்தமும் கேட்டு முடிந்தவுடன் அதனைச் சிந்தித்து இன்புற்று அந்தத் திருப்தியிலே, “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று பெருமிதம் அடைந்தேன்.

பாடம் சொல்லப் பிறந்தவர்

என் ஆசிரியர் பாடம் சொல்லும்போது கையிலே புஸ்தகம் வைத்துக்கொள்ளும் வழக்கமில்லை. அப்பெரியாருக்கு அவ்வளவு செய்யுட்களும் மனப்பாடமாகவே இருந்தன; சிறிதேனும் தடையின்றிப் பாடல்களைச் சொல்வதும் பொருள் சொல்வதும் பதசாரம் சொல்வதுமாகவே அவர் பெரும்பாலான நேரத்தைக் கழிப்பார். “இவர்கள் இதற்காகவே உதித்தவர்கள்” என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. பாடஞ் சொல்வதில் அவருக்குச் சலிப்பே ஏற்படாது.

அவரிடம் பாடங் கேட்கும்போது நாங்கள் அடையும் பயன் பலவகைப்படும். நூலுக்குப் பொருளுரைப்பதோடு நூலாசிரியர்