பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—32

தமிழே துணை


கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் நான் சங்கீதப்பயிற்சி செய்து வருவது என் ஆசிரியருக்கு முதலில் தெரியாது. அதை நானும் தெரிவிக்கவில்லை. பிள்ளையவர்களுக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கும் பழக்கமுண்டு. பாரதியார் பெரிய சிவபக்தர் என்ற நினைவினால் அவரிடத்து என் ஆசிரியர் மதிப்பு வைத்திருந்தார்; அவரது சங்கீதத் திறமைக்காக அன்று. தமிழறிவு போதிய அளவு அவர்பால் இல்லையென்ற எண்ணம் பிள்ளையவர்களுக்கு இருந்தது. பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனத்தில் இலக்கணப்பிழைகள் உள்ளன என்ற காரணத்தால் என் ஆசிரியர் அச்சரித்திரத்தைப் பாராட்டுவதில்லை. ஆனாலும் அதிற் கனிந்து ததும்பும் பக்திரஸத்தில் ஈடுபட்டு அதற்கும் ஒரு சிறப்புப்பாயிரச் செய்யுள் அளித்திருக்கிறார்.

ரகசியம் வெளிப்பட்டது

எப்பொழுதேனும் இவ்விரு பெரியாரும் சந்திப்பதுண்டு. ஒருமுறை அவ்வாறு சந்தித்தபோது, பிள்ளையவர்கள் பாரதியாருக்கு உவப்பாக இருக்குமென்று கருதி, “என்னிடம் ஒரு பிராமணச் சிறுவர் பாடங் கேட்க வந்திருக்கிறார்; ராகத்தோடு பாடல் வாசிக்கிறார். தாங்கள் ஒருமுறை அவர் படிப்பதைக் கேட்டு ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார். இசையுடன் படிப்பது ஒரு பெரிய காரியமென்றும், அதைக் கேட்டால் பாரதியார் திருப்தி அடைவாரென்றும் அவர் எண்ணினார்.

“அந்தப் பிள்ளையாண்டானை எனக்கு நன்றாகத் தெரியுமே. என்னிடமும் வந்து காலைவேளைகளில் சிக்ஷை சொல்லிக்கொள்ளுகிறான். நல்ல சாரீரம் இருக்கிறது. தங்களிடம் அவன் பாடங் கேட்டு வருவதும் எனக்குத் தெரியும். சங்கீதத்தோடு தமிழ் கலந்தால் நன்றாகத்தான் இருக்கும்” என்று கூறினார் பாரதியார். அவர் கூறிய வார்த்தைகள் பிள்ளையவர்களிடம் வெறும் தமிழ் மாத்திரம் இருப்பது ஒரு குறையென்று தொனிக்கும்படி இருந்தன.

பிள்ளையவர்கள் அச்செய்தியைக் கேட்டதும் திடுக்கிட்டார். உடனே பாரதியாரிடம் விடைபெற்று நேரே தம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டின் ஒரு பக்கத்தில் நண்பர்களுடன் நான்