பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

என் சரித்திரம்

எதையோ படித்துக்கொண்டிருந்தேன். அவர் வேகமாக என் அருகில் வந்து, “நீர் முடி கொண்டான் பாரதியாரிடம் இசைப் பயிற்சி செய்து வருகிறீராமே!” என்று கேட்டார். அக்கேள்வி என்னைத் திகைக்க வைத்தது. நான் அவரிடம் சொல்லாமல் இசைப் பயிற்சி செய்து வந்தது பிழைதான். பிழையென்று தெரிந்தாலும் நான் உடனே சொல்வதற்கு அஞ்சினேன். பாரதியார் பிள்ளையவர்களை முன்பே சங்கீத விரோதியென்று சொல்லியிருந்ததனாலும் நான் பழகின அளவில் சங்கீதத்தில் அவருக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லையாதலாலும் அந்த அச்சம் எனக்கு உண்டாயிற்று. ‘நின்ற வரையிலும் நெடுஞ்சுவர்’ என்ற எண்ணத்துடன் சங்கீத தெய்வத்தை மறைவாக உபாசனை செய்து வந்தேன்.

இந்த நிலையில் என் ரகசியம் வெளிப்பட்டபோது நான் திகைப்படையாமல் என்ன செய்வேன்? என்ன பதில் சொல்வது? “பழக்கம் விட்டுப்போகாமல் இருப்பதற்காக அவரிடம் கற்றுக்கொள்ளும்படி என் தகப்பனார் சொன்னார்” என்று வாய் குழறிக்கொண்டே சொன்னேன். இயற்றமிழை மாத்திரம் தனித்து விரும்பும் அப்புலவர் தலைவர், “எனக்கு இதுவரையில் அந்த விஷயம் தெரியாது. இசையில் அதிகப்பழக்கம் வைத்துக்கொண்டால் இலக்கண இலக்கியங்களில் தீவிரமாகப் புத்தி செல்லாது” என்று சொல்லிவிட்டுத் தம் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

‘அவர் சொன்னது உண்மை’

அவர் கூறிய செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்பதை ஆராய நான் முற்படவில்லை. பாரதியார் அவரைப்பற்றிச் சொன்னது மாத்திரம் உண்மையென்று அன்று உணர்ந்தேன். “இனிமேல் சங்கீதத்தைக் கட்டி வைக்கவேண்டியதுதான்” என்ற முடிவிற்கு வந்தேன். மறுநாள் முதல் பாரதியாரிடம் சங்கீதப் பயிற்சிக்காகச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

இந்நிகழ்ச்சியால் எனக்கு அதிக மனவருத்தம் உண்டாகவில்லை. சங்கீதம் எங்கள் பரம்பரைச் சொத்து. அதற்காக அதிகச் சிரமப்படவேண்டியதில்லை. தமிழறிவோ கிடைத்தற்கரிய பெரும் பேறாக எனக்கு இருந்தது, ஆதலின் அதற்கு முன்னே வேறு எந்தப் பொருளும் எனக்குப் பெரியதாகவே தோற்றவில்லை.

அப்பால் நான் பாரதியாரிடம் சென்று, “படிக்க வேண்டிய பாடங்கள் அதிகமாக இருப்பதால் தினந்தோறும் இங்கே வந்து அப்பியாசம் செய்ய முடியாதென்று தோன்றுகிறது. அவகாசமுள்ள வேளைகளில் வந்து தரிசனம் செய்துவிட்டுப் போகிறேன்” என்று கேட்டுக்கொண்டேன்.