பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

என் சரித்திரம்

பெரியோர்களைக் கேட்கத் தொடங்கினர். அவர் வைதிக ஒழுக்கமும் தானசீலமும் உடையவரென்பதை யாவரும் அறிந்திருந்தனர்; ஆதலின் அப்பெரியோர்கள், “ஓர் அக்கிரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேதவித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும்” என்றார்கள்.

“இதுதானா பிரமாதம்? அப்படியே செய்துவிடுவோம்; இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்” என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறாக 24 கிணறுகளையும் அமைக்கச் செய்தார். வேதாத்தியயனம் செய்த 48 பிராமணர்களை அருகிலும் தூரத்திலும் உள்ள ஊர்களிலிருந்து வருவித்து, அந்த வீடுகளையும், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு மா நன்செயும் அதற்குரிய புன்செயுமாகிய நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால் அவ்வூர்[1] உத்தமதானபுரம் என்னும் பெயரால் வழங்கலாயிற்று.

அரசருடைய விரதபங்கம் நாற்பத்தெட்டுக் குடும்பங்களுக்குப் பாக்கியத்தை உண்டாக்கிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதானபுரத்தில் வைதிக ஒழுக்கம் பிறழாமல் வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் பெற்ற நிலங்கள் இன்றும் தனித் தனியே ஒரு பங்கு என்று வழங்கி வருகின்றன. நாற்பத்தெட்டு பங்கு நிலமும், நாற்பத்தெட்டு வீடுகளும், இருபத்துநாலு கிணறுகளும் கொண்ட இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழந்து விடாமல் தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசம் தாலூகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது.

இவ்வூருக்குப் பழைய காலத்தில் பழையகரமென்று பெயர். அகரமென்பதற்கு அக்கிரகாரமென்று அர்த்தம். பக்கத்திலுள்ள அக்கிரகாரங்களெல்லாவற்றையும் விட இது பழமையானமையின் இப்பெயர் பெற்றது போலும். இப்பொழுது உள்ள குடியானத் தெரு முன்பு பிராமணர்கள் குடியிருந்த இடமாக இருந்ததென்றும், அரசர் தானம் செய்த காலத்தில் அங்கிருந்தவர்கள் புதிய அக்கிரகாரத்திற் குடியேறினரென்றும் சொல்வார்கள். குடியானத் தெருவின் மேலைக் கோடியில் ஒரு பெருமாள் விக்கிரகமும் தென்கிழக்கில் கண் கொடுத்த பிள்ளையாரென்று ஒரு விநாயகரது கோயிலும் இருக்கின்றன. அக்கிரகாரமாக அது முன்பு இருந்த


  1. பாபநாசம் ரெயில்வேஸ்டேஷனுக்குக் கிழக்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது.