பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கள் ஊர்

3

தென்பதற்கு உரிய அடையாளங்கள் இவை. பாபநாசத்திலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் தமக்குரிய பிரம்மோத்ஸவத்தில் இந்தப் பெருமாளிடமும் உத்தமதானபுரம் புதிய அக்கிரகாரத்திலுள்ள பெருமாள் கோயிலுக்கும் வந்து செல்கின்றார்.

உத்தமதானபுர அக்கிரகாரம் இரண்டு தெருக்களை உடையது. ஒன்று கீழ் மேலாகவும், மற்றொன்று தென் வடலாகவும் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் இரண்டு சிறகுகள் இருக்கின்றன. கீழ்மேல் தெருவின் மேல் கோடியில் பெருமாள் கோயிலும் தென்வடல் தெருவின் தென்கோடியின் தென்புறத்தில் சிவாலயமும் இருக்கின்றன. பெருமாளுக்கு லக்ஷ்மீ நாராயணப் பெருமாளென்பது திருநாமம். சிவாலயத்தின் ஸந்நிதியில் ஒரு குளம் உள்ளது. அதற்கு லக்ஷ்மீ தீர்த்தமென்று பெயர். சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் கைலாசநாத ரென்பது; ஆனந்தவல்லி யென்பது அம்பிகையின் திருநாமம். இக்கோயிலில் உள்ள விநாயகமூர்த்தியிடம் இவ்வூரினர் மிக்க பக்தியுடையவர்கள். இவ்வூரில் வசிப்பவர்களும், இவ்வூரிலிருந்து வெளியூர் சென்று வாழ்பவர்களும் தங்கள் வீடுகளில் ஏதேனும் சுபகாரியம் நடைபெற்றால் அதற்கு முன்பு அந்த மகா கணபதிக்கு நிறைபணி செய்துவிட்டுப் போவார்கள். காது குத்துக் கல்யாணமாக இருந்தாலும் அந்த விநாயக மூர்த்தியை அவர்கள் மறப்பதில்லை. இவ்விரண்டு கோயில்களிலும் நித்தியபூஜையும் உத்ஸவங்களும் கிரமமாக நடைபெற்று வருவதுண்டு.

இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது; ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.

இவ்வளவு ரூபா யென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுரவாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.