பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

என் சரித்திரம்

நான் படிக்க வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் அவனை, “பஞ்சநதம்” என்று அழைத்தேன். அவன் பதில் பேசாமலே போய்விட்டான். நான் அவ்வாறு அழைத்ததைக் கவனித்த என் ஆசிரியர் அவன் இல்லாத சமயம் பார்த்து என்னிடம், “அவனை இனிமேல் பஞ்சநதமென்று கூப்பிட வேண்டாம்; பஞ்சநதம்பிள்ளையென்று அழையும். நீ என்று ஒருமையாகவும் பேச வேண்டாம்; நீர் என்றே சொல்லும்; நீங்கள் என்றால் பின்னும் உத்தமம். அவன் முரடன்; நான் அவன் மனம் கோணாமல் நடந்து காலம் கழித்து வருகிறேன்” என்று கூறினார். மனித இயற்கைகள் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றனவென்று அறிந்து அது முதல் நான் ஜாக்கிரதையாகவே நடந்து வரலானேன்.

அத்தியாயம்—35

சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்

திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளவர்களுக்குத் தாமிரபரணி நதியும் திருக்குற்றால ஸ்தலமும் பெரிய செல்வங்கள்; அவற்றைப் போலவே மேலகரம் திரிகூடராசப்பக்கவிராயர் இயற்றிய நூல்கள் இலக்கியச் செல்வமாக விளங்குகின்றன. மேலகரமென்பது தென்காசியிலிருந்து திருக்குற்றாலத்திற்குப் போகும் வழியில் உள்ளது. முன்பு திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து வெளியிடங்களுக்கு வரும் கனவான்களிற் பெரும்பாலோர் திருக்குற்றாலக் குறவஞ்சியிலிருந்து சில பாடல்களைச் சொல்லி ஆனந்தமடைவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்; பலர் திருக்குற்றாலத் தல புராணத்திலிருந்தும் அரிய செய்யுட்களைச் சொல்லி மகிழ்வார்கள். தென்பாண்டி நாட்டார் பெருமதிப்பு வைத்துப் பாரட்டிய திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்களைப் பிள்ளையவர்கள் படித்ததில்லை. அவற்றை வருவித்துப் படிக்கவேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.

திருக்குற்றால யமக அந்தாதி

அக்காலத்தில் திருவாவடுதுறையில் ஆதீனகர்த்தராக விளங்கியவர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் என்பவர். அவர் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையில் உதித்தவர். அவருடைய தம்பியாரும் மாணாக்கருமான சண்பகக்குற்றாலக் கவிராயர் என்பவர் மூலமாகப் பிள்ளையவர்கள் திருக்குற்றாலத் தல