பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்

209

புராணத்தையும் திருக்குற்றால யமக அந்தாதியையும் வருவித்துத்தாமே படித்து வரத் தொடங்கினார். யமக அந்தாதிக்கு ஒருவாறு பொருள் வரையறை செய்துகொண்டு எங்களுக்கும் பாடம் சொன்னார். குற்றாலத் தலபுராணத்தையும் இடையிடையே படிக்கச் செய்து கேட்டு இன்புற்று வந்தார். அந்நூலின் நடை நயத்தையும் பொருள் வளத்தையும் மிகவும் பாராட்டினார்.

எனக்குத் திருக்குற்றால யமக அந்தாதியில் சில செய்யுட்கள் பாடமாயின; அந்நூலைப் பாடம் சொல்லும்போது பிள்ளையவர்கள், “இதனை இயற்றிய கவிராயர் நல்ல வாக்குடையவர்; இப்போது திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கிற [1]மகாசந்நிதானம் அக்கவிராயர் பரம்பரையில் உதித்தவர்களாதலால் தமிழிற் சிறந்த புலமை உடையவர்கள். வடமொழியிலும் சங்கீதத்திலும் நல்ல ஞானம் உள்ளவர்கள். அவர்களை நீரும் சமீபத்தில் தரிசிக்கும்படி நேரும்” என்று கூறினார்.

‘குட்டிகளா!’

திருவாவடுதுறையிற் பதினைந்தாம் பட்டத்தில் இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகருடைய குருபூஜை வந்தது. அதற்கு வரவேண்டுமென்று ஆதீனகர்த்தர் பிள்ளையவர்களுக்குத் திருமுகம் அனுப்பியிருந்தார். அதற்காக அவர் திருவாவடுதுறை சென்று அங்கே மூன்று தினங்கள் இருந்துவிட்டு வந்தார். வந்தவுடன் அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் ஒரு நண்பரிடம் சொன்னார். நானும் பிற மாணாக்கர்களும் உடனிருந்து கவனித்தோம்.

“மகாசந்நிதானம் மிகவும் அன்போடு விசாரித்துப் பாராட்டியது. திருவாவடுதுறைக்கே வந்து இருந்து மடத்திலுள்ளவர்களுக்குப் பாடஞ் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டது. அங்கேயுள்ள குட்டிகளும் என்னை மொய்த்துக்கொண்டு, ‘எப்படியாவது இங்கே வந்திருந்து பாடஞ் சொல்லித் தரவேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். நான் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டு வந்தேன்” என்று ஆசிரியர் சொன்னார்.

நான் கவனித்து வரும்போது ‘குட்டிகள்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் திடுக்கிட்டேன். “மடத்தில் குட்டிகள் இருக்கிறார்களா? என்று பிரமித்தேன். குட்டிகள் என்று இளம்பெண்களை யாவரும் கூறும் வழக்கத்தையே நான் அறிந்தவன். பக்கத்திலிருந்த சவேரிநாத பிள்ளையிடம், “குட்டிகள் மடத்தில்


  1. ஆதின கர்த்தவர்களை 'மகா சந்நிதான' மென்றும் 'சந்நிதான' மென்றும் சொல்வது வழக்கம்.

என்—14