பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

என் சரித்திரம்

விளங்கினர். கவலை என்பதையே அறியாத செல்வரது முகத்தில் உள்ள தெளிவு அவர் முகத்தில் பிரகாசித்தது. அவரது காவியுடை, ருத்திராட்ச மாலை, தலையில் வைத்துள்ள ஜபமாலை ஆகிய இவைகள் அவரது சைவத்திருக்கோலத்தை விளக்கின.

காதில் அணிந்திருந்த [1]ஆறுகட்டி, சுந்தர வேடம், விரல்களில் உள்ள அங்குஷ்டம் பவித்திரம் என்பவைகள், தேகத்திலிருந்த ஒளி, அந்த மேனியிலிருந்த வளப்பம் எல்லாம் அவர் துறவிகளுள் அரசராக விளங்கியதைப் புலப்படுத்தின. அவருடைய தோற்றத்தில் தவப்பயனும் செல்வப் பயனும் ஒருங்கே விளங்கின. அவர் முகமலர்ச்சியிலே, அவருடைய பார்வையிலே, அவர் அமர்ந்திருந்த நிலையிலே, அவரது கம்பீரமான தோற்றத்திலே ஓர் அமைதியும், கண்டாரைக் கவரும் தன்மையும் இயல்பாகவே அமைந்திருக்கும் தலைமையும் ரஸிகத்துவமும் புலப்பட்டன.

அவரைச் சுற்றிப் பலர் உட்கார்ந்திருந்தனர். எல்லோருடைய முகத்திலும் அறிவின் தெளிவு மலர்ந்திருந்தது. எல்லாருடைய முகங்களும் சுப்பிரமணிய தேசிகரை நோக்கியபடியே இருந்தன. பிள்ளையவர்கள் புகுந்தவுடன் தேசிகர் கண்களிலே தோற்றிய பார்வையே அவரை வரவேற்றது. அங்கிருந்த யாவரும் என் ஆசிரியரைப் பார்த்தனர். அவர்களிடையே ஓர் உவகைக் கிளர்ச்சி உண்டாயிற்று.

ஆசிரிய வணக்கம்

பிள்ளையவர்கள் தேசிகரைச் சாஷ்டாங்கமாக வணங்கினர். அவருடைய சரீர அமைப்பு அப்படி வணங்குவதற்கு எளிதில் இடம் கொடாது. சிரமப்பட்டே வணங்க வேண்டும். ஆதலின் அவர் கீழ் விழுந்து நமஸ்காரம் செய்த காட்சி எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. புலவர் சிகாமணியாகிய அவர் புலமைநிலை மிக உயர்ந்தது. பிறரை வணங்காத பெருமையை உடைய அவர் அவ்வாறு பணிந்து வணங்கியபோது அவரது அடக்கத்தையும் குருபக்தியையும் உணர்ந்து பின்னும் வியப்புற்றேன்.

வணங்கி எழுந்த ஆசிரியர், தேசிகரிடம் திருநீறு பெறுவதற்கு அணுகினார். அப்போது நான் அவர் பின்னே சென்றேன். தேசிகர்


  1. ஆறுகட்டி என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், பாற்சரியம் என்னும் ஆறையும் அடக்கியவர் என்பதைக் குறிக்கும் ஓர் ஆபரணம். சுந்தர வேடம் என்பது காதில் அணந்து கொள்ளும் வட்டமான பொன் ஆபரணம். இது சுந்தரமூர்த்தி நாயனாரால் அணியப்பெற்றதாதலன் இப்பெயர் வந்ததென்பர். சைவாசாரியர் இதை அணவது வழக்கம்.