பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்

213

முன் பிள்ளையவர்கள் குனிந்தார். அவர் அன்புடன் பிள்ளையவர்களது நெற்றியில் திருநீறிட்டு, “உட்கார வேண்டும்” என்றார். வழக்கம்போல் இரண்டாவது முறை பிள்ளையவர்கள் வணங்கத் தொடங்கியபோது. “ஒருமுறை வணங்கியதே போதும். இனி இந்த வழக்கம் வேண்டாம்” என்று தேசிகர் சொல்லவே அவர் மீட்டும் வணங்காமல் அருகில் ஓரிடத்தில் அமர்ந்தார். அமர்ந்த பிறகு, “உங்களிடம் பாடங் கேட்டு வரும் சாமிநாதையரா இவர்?” என்று தேசிகர் என்னைச் சுட்டிக் கேட்டார். “ஸ்வாமி” என்று பிள்ளையவர்கள் சொல்லவே, தேசிகர் என்னையும் உட்காரச் சொன்னார். பெரியோர்களிடத்தில் மற்றவர்கள் ஆம் என்னும் பொருளில் ‘ஸ்வாமி’ என்னும் வார்த்தையை உபயோகிப்பது வழக்கம். நான் என் ஆசிரியருக்குப் பின்னால் இருந்தேன். “நம்மைப் பற்றி முன்னமே நம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்களே! இவர்களும் ஞாபகம் வைத்திருக்கிறார்களே” என்று எண்ணி உளம் பூரித்தேன்.

‘நீங்கள் இல்லாத குறை’

தேசிகர் பிள்ளையவர்களுடைய க்ஷேம சமாசாரங்களை முதலில் விசாரித்தார்; பின்பு. “மகாவைத்தியநாதையரவர்கள் இங்கே வந்திருந்தார்கள்; நேற்று மாலையில் சோமாசிமாற நாயனார் கதை பண்ணினார்கள். திருவிடைமருதூர், திருவாலங்காடு முதலிய இடங்களிலிருந்து சம்ஸ்கிருத வித்துவான்களும் வேறு ஊர்களிலிருந்து கனவான்களும் வந்திருந்தார்கள்; நல்ல ஸதஸ்; நீங்கள் இல்லாதது தான் குறையாத இருந்தது; மகாவைத்தியநாதையரவர்கள் பல வடமொழி நூல்களிலிருந்து அருமையான மேற்கோள்களை எடுத்துக்காட்டினார்கள். பெரியபுராணம், தேவார, திருவாசகம் முதலிய நூல்களிலிருந்தும் உங்கள் வாக்காகிய சூதசங்கிதையிலிருந்தும் செய்யுட்களை எடுத்துச் சொல்லிப் பிரசங்கம் செய்தார்கள். உங்கள் வாக்கைச் சொல்வதற்கு முன் ‘பிள்ளையவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று பீடிகை போட்டுக்கொண்டு செய்யுளை இசையுடன் சொல்லி அர்த்தம் கூறும்போது உங்கள் பெருமை எல்லோருக்கும் விளங்கியது. இப்படி அடிக்கடி உங்கள் வாக்கை எடுத்துக்காட்டினார்கள். அதுமுதல் உங்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறோம். இங்கேயுள்ள தம்பிரான்களும் பிறரும் உங்கள் வரவை வெகு ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்” என்று உரைத்தார். அப்போது, அவருடைய வார்த்தைகளில் அன்பும் இனிமையும் வெளிப்பட்டன. “உலகம் பெரிது; அதில் உள்ள பெரியோர்கள் அளவிறந்தவர்கள். மனத்தைக் கவரும் அரிய குணங்களும் அநந்தம்” என்று நான் நிமிஷத்துக்கு நிமிஷம் எண்ணமிடலானேன்.