பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

என் சரித்திரம்

அந்தாதியிவிருந்து, “அம்பலவா வம்பலவா” என்ற பாடலைச் சொன்னபோது முன்பு சொன்னவற்றைவிடத் தெளிவாகவும் சொன்னேன். பைரவி ராகத்தின் மூர்ச்சைகளை ஒருவிதமாகப் புலப்படுத்தினேன்.

தேசிகர் முகத்தில் புன்முறுவல் அரும்பியது; அவர் சிரம் சிறிதே அசைந்து என் உள்ளத்தில் உவகையை உண்டாக்கியது. அச் செய்யுளுக்கும் பொருள் சொன்னேன். மேலும் எந்தச் செய்யுளைச் சொல்லலாம் என்று யோசித்தபோது சுப்பிரமணியதேசிகர் திரிகூட ராசப்பக் கவிராயர் பரம்பரையில் தோன்றியவரென்று என் ஆசிரியர் கூறியது நினைவுக்கு வரவே, திருக்குற்றால யமக அந்தாதியிலிருந்து ஒரு செய்யுளைச் சொல்லத் தொடங்கினேன். “புவிதந்த வாரணன்” என்ற பாடலைச் சொன்னேன்.

தேசிகர் அதைக் கவனமாகக் கேட்டார். அவரது பரம்பரைச் சொத்தல்லவா அது? நான் அச்செய்யுளின் அடிகளை இருமுறை, மும்முறை சொல்லி முடித்துப் பொருளும் சொன்னேன்.

“இன்னும் இந்நூலிலிருந்து ஏதாவது சொல்லும்” என்று தேசிகர் கூறினபோது, “நான் எதிர்பார்த்தது பலித்தது” என்ற உற்சாகம் எனக்கு ஏற்பட்டது. மேலும் எனக்குத் தெரிந்த செய்யுட்களைச் சொன்னேன்.

“இது திருக்குற்றால யமக அந்தாதி அல்லவா? இந்தப் பக்கத்தில் இது வழங்குவதில்லையே. இவருக்கு எப்படிக் கிடைத்தது?” என்று சுப்பிரமணிய தேசிகர் கேட்டார்.

பிள்ளையவர்கள், “நெடுநாட்களாக இந்த நூலையும் திருக்குற்றாலப் புராணத்தையும் படிக்க வேண்டுமென்ற அவா அடியேனுக்கு இருந்தது. சண்பகக்குற்றாலக் கவிராயர் அவற்றை வருவித்துக் கொடுத்தார். நான் அந்தாதியை முதலிற் படித்துப் பொருள் வரையறை செய்துகொண்டு இவருக்கும் பாடம் சொன்னேன். குற்றாலப்புராணத்தையும் படித்து வருகிறேன்” என்றார்.

“அப்படியா!” என்று சொல்லி மேலும் ஏதாவது சொல்ல வேண்டும் என்ற குறிப்போடு என்னைத் தேசிகர் பார்த்தார். நான் திருப்புகலூர் அந்தாதியிலிருந்து சில பாடல்களைச் சொன்னேன். அவருடைய முகக்குறிப்பிலே திருப்தியையும் ஆதரவையும் கண்டேனாதலால் நான் வர வரத் தைரியத்தை அடைந்து பாடல்களையும் அவற்றின் பொருளையும் சொல்லி வந்தேன்.

‘நன்றாகப் பாடல் சொல்லுகிறார். நல்ல சாரீரம் இருக்கிறது; சங்கீத ஞானமும் இருக்கிறது. முன்னுக்கு வருவாரென்று தோற்று-