பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம்‌ புதுமை

217

கிறது. தங்களிடம் மாணாக்கராக இருக்கும்போது இவர் நல்ல நிலையை அடைவதற்கு என்ன சந்தேகம்?” என்று தேசிகர் கூறினார்.

“சந்நிதானத்தின் முன்பு இவர் வந்தபோதே இவரது நிலை உயர்ந்துவிட்டதென்று அடியேன் தீர்மானித்துக்கொண்டேன். சந்நிதானத்தின் திருவுள்ளத்தில் இவரிடம் கருணை உண்டான பிறகு இவருக்கு என்ன குறை?” என்று பிள்ளையவர்கள் கூறினர்.

தேசிகர் கூறிய வார்த்தைகள் என் செவி நிரம்பப் புகுந்து என் உள்ளத்தில் பூரணமான இன்பத்தை விளைவித்தன. “நாம் சோதனையில் வெற்றி பெற்றோம்” என்ற எண்ணம் அந்த இன்பத்துக்கு ஆதாரமாக இருந்தது.

அதன்பிறகு வேறு விஷயங்களைப்பற்றிப் பிள்ளையவர்களும் ஆதீனத் தலைவரவர்களும் பேசி வந்தனர். அப்பால், “நேரமாகிவிட்டது; தங்கள் பூஜையை முடித்துக்கொண்டு சபாபதி தரிசனத்திற்கு வரவேண்டும்” என்று தேசிகர் கூறவே, அப்புலவர்பிரான் விடைபெற்று எழுந்து ஸ்நானம் செய்யும் பொருட்டு அங்குள்ள தெற்குக் குளப்புரைக்கு வந்தார். நானும் பின் தொடர்ந்தேன். சபாபதி பூஜை என்பது மடத்தில் தினந்தோறும் ஆதீனகர்த்தரவர்கள் செய்யும் பூஜை.

நான் கண்ட காட்சிகள்

நான் நடந்து செல்லும்போது என் கண்கள் ஒரு நிலையில் இல்லை. அங்கங்கே உள்ள காட்சிகள் அவற்றை இழுத்துச் சென்றன. தூய்மை, தவக்கோலம், சிவமணங்கமழும் அமைப்புக்கள் எல்லாம் அங்கே விளங்கின. மடத்தின் தெற்கு வாயிலுக்கு எதிரே ஓர் அழகிய குளம் உண்டு. அதன் கரையில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அதையே குளப்புரை என்று வழங்குவார்கள். புரை என்பதற்கு வீடு என்பது பொருள். மலையாளத்தில் இவ்வாறு சொல்வது வழக்கம்.

குளப்புரைக்கு நாங்கள் சென்றோம். அங்கே பிள்ளையவர்களுக்கு வெந்நீர் போடப்பட்டிருந்தது. அவர்கள் அங்கே செல்லும்போது பெரிய தம்பிரான்களும் குட்டித் தம்பிரான்களும் மடத்து உத்தியோகஸ்தர்களும் ஓதுவார்களும் அவரைச் சுற்றிக்கொண்டு க்ஷேம சமாசாரம் விசாரித்தார்கள். பலர், “இனிமேல் இங்கேதானே வாசம்?” என்று வினவினார்கள். அதற்கு விடை கிடைப்பதற்கு முன்பே சில தம்பிரான்கள், “ஐயாவிடம் பாடங் கேட்கவேண்டு-