பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனக்குக் கிடைத்த பரிசு

223

பிள்ளையவர்கள் சாதாரணமாகச் சிறிதும் சிரமமின்றி அச்சிக்கல்களை விடுவித்துக்கொண்டே சென்றார்; பணிவோடு மெல்ல விளக்கி வந்தார்; லவலேசமாவது கர்வத்தின் சாயை அவரிடம் தோன்றவில்லை.

அஷ்ட நாகபந்தம்

தம்பிரான்கள் சில புஸ்தகங்களிலுள்ள சந்தேகங்களைக் கேட்ட பிறகு தண்டியலங்காரத்திலுள்ள ஐயங்களை வினவத் தொடங்கினார்கள். அதில் வரும் அஷ்ட நாகபந்தச் செய்யுளை நாகங்களைப் போட்டு அடக்கிக்காட்டும்வண்ணம் கேட்டார்கள். அஷ்ட நாகபந்தமென்பது சித்திர கவிகளுள் ஒன்று. எட்டு நாகங்கள் இணைந்திருப்பதாக அமைந்த சித்திரமொன்றில் செய்யுட்கள் அடங்கியிருக்கும். பிள்ளையவர்கள் காகிதமும் எழுதுகோலும் வருவித்துப் போடத் தொடங்கினர்.

என் அவசரம்

அவர் தொடங்கு முன் நான் ஒரு காகிதத்தில் அந்தச் சித்திரத்தை எழுதி அதற்குள் செய்யுட்களையும் அடக்கிக் காட்டினேன். நான் அவ்வாறு துணிந்து செய்தது தவறென்று இப்போது தெரிகிறது. ஆனாலும் தம்முடைய ஆற்றலைச் சமயங்களில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசையிருப்பது மனிதர்களுக்கு இயல்புதானே! அந்த ஆசையால் தூண்டப்பெற்று நான் அஷ்ட நாக பந்தத்தை அமைத்தேன்.

அதை நான் போட்டு முடித்ததைப் பார்த்த ஆசிரியர், “நன்றாக இருக்கிறதே! இதை நீர் எங்கே கற்றுக்கொண்டீர்?” என்று கேட்டார். “செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் தெரிந்துகொண்டேன். இன்னும் ரதபந்தம் முதலிய சித்திரகவிகளையும் போடுவேன்” என்றேன்.

எல்லாம் கிடைக்கும்

நான் போட்ட அஷ்ட நாகபந்தத்தைத் தம்பிரான்கள் பார்த்தனர்; சுப்பிரமணிய தேசிகரும் பார்த்தார். “இவர் சுறுசுறுப்பாக இருக்கிறாரே. பல சங்கதிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாரே” என்று சுப்பிரமணிய தேசிகர் சந்தோஷத்தோடு சொன்னார். என்னைப் பார்த்து, “பிள்ளையவர்களிடமிருந்து நன்றாகப் படித்துக்கொள்ளும். இளம்பிராயமாக இருக்கிறது. இவர்களிடம் எவ்வளவோ தெரிந்துகொள்ளலாம். இவர்கள் இங்கே