பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

என் சரித்திரம்

வரும்பொழுது உடன் வாரும். உமக்கு வேண்டிய சௌகரியங்கள் கிடைக்கும். கல்யாணங்கூடச் செய்துவைப்போம்” என்று புன்னகையோடு சொன்னார். நான் சிறிது சிரித்தேன்.

“என்ன சிரிக்கிறீர்! கல்யாணம் என்றால் சந்தோஷமாகத்தான் இருக்கும்” என்றார்.

பிள்ளையவர்கள் அப்போது, “இவருக்கு விவாகம் ஆகிவிட்டது” என்றார்.

“அப்படியா, அதுதான் சிரிக்கிறாரோ! ஆனாலென்ன? மற்றக் காரியங்களெல்லாம் நடக்க வேண்டாமா? எல்லாச் சௌகரியங்களையும் பண்ணிவைப்போம்” என்று தேசிகர் சொல்லிவிட்டு, “உமக்குப் படிப்பதற்கு வேண்டிய புஸ்தகங்களை வாங்கிக் கொடுப்போம்” என்றார்.

“சந்நிதானத்தின் கருணை இருந்தால் எல்லாம் கிடைக்கின்றன” என்று ஆசிரியர் கூறினார்.

புஸ்தகப் பரிசு

தேசிகர் உடனே எழுந்திருந்து பக்கத்திலிருந்த பீரோ ஒன்றைத் திறக்கச் செய்தார். அதில் நிறையப் புஸ்தகங்கள் இருந்தன. அதிலிருந்து பல புஸ்தகங்களை எடுத்து வந்து, “கம்பரந்தாதி படித்திருக்கிறீரா? இந்தாரும் படியும். அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் இவைகளையெல்லாம் இவர்களிடம் கேட்டுக்கொள்ளும். சிவஞான சுவாமிகள் வாக்கு அற்புதமாக இருக்கும்” என்று சொல்லிச் சில பிரபந்தங்களில் ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு பிரதிகளைக் கொடுத்தார். கொடுத்துவிட்டு, “இவைகளில் ஒவ்வொன்றை நீர் எடுத்துக்கொள்ளும்; மற்றவற்றை உடன்படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடும்” என்று சொன்னார். நான் மிக்க ஆவலோடு ஒவ்வொரு புஸ்தகத்தையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். கை நிறையப் பணம் தந்தால் கூட எனக்கு அவ்வளவு ஆனந்தம் உண்டாயிராது.

“இந்தப் பிரபந்தங்களை எல்லாம் படியும். பின்பு பெரிய புஸ்தகங்கள் தருகிறோம்” என்று சுப்பிரமணிய தேசிகர் அன்போடு உரைத்தார். பிறகு, “எங்கே, தெரிந்த பாடல்களில் எவற்றையேனும் இசையுடன் சொல்லும்; கேட்போம்” என்றார். காலையில் நான் பைரவி ராகத்திற் பாடல்களைச் சொன்னேன். அப்பொழுது வேறு ராகங்களிலே சில செய்யுட்களைச் சொன்னேன். கேட்டு